சசிகலாவுடன் சேருகிறார் செங்கோட்டையன்? – அதிமுக பரபரப்பு

கோவை அடுத்த அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு விவசாயிகள் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கான பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். மேலும் கே.செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் ச ம உக்கள் எனப் பலரும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக விழாவிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டார். எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டது தொண்டர்களிடையே குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமி, தொலைபேசியில் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அடுக்கடுக்கான புகார்களை செங்கோட்டையன் சொன்னதாகக் கூறப்படுகின்றது. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் தனக்கு இருந்த முக்கியத்துவம், மாநிலப் பொறுப்பு ஆகியவை பற்றியும், தற்போது 3 தொகுதிகள் அடங்கிய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு செயலாளராக நியமித்திருப்பதையும், தமிழ்மகன் உசேன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு பதவி கொடுத்தது பற்றியும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தனக்கான முக்கியத்துவதைக் குறைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சட்டமன்ற கொறடா பதவி கொடுத்தது பற்றியும் பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கூவத்தூரில் முதலமைச்சர் தேர்வின்போது தான் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதை மறந்துவிட்டு தன்னை கட்சியில் இருந்து புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்? எனக் கேட்டுள்ளார். கட்சியில் மேற்கு மண்டலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களின் ஆதரவு உள்ள நிலையில் தன்னிடம் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் கட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

2024 இலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக தனக்கு தகவல் கூட தெரிவிக்காதது, தன்னுடைய மாவட்டத்தில் முன்னாள் ச ம உவிற்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்து அவருக்குக் கீழே நான் கட்சிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகின்றது.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்குப் பதிலாக கட்சிக்குள் யாரை ஓரங்கட்டலாம் என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தால் கட்சி எப்படி வளரும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து கட்சி ரீதியாக தன்னைப் புறக்கணித்து வருகின்ற நிலையில் எப்படி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும் என்றும் தனது கோபத்தைக் காட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்.

செங்கோட்டையன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி எந்தப் பதிலும் அளிக்காமல் கடைசி வரை மவுனமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து செங்கோட்டையனை சமாதானப்படுத்துவது குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை இரகசியமாக சமாதானப்படுத்த முயன்றாலும், வெளிப்படையாக அவரை ஓரங்கட்டும் முயற்சியில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். இதனால், தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனையை தீவிரப்படுத்தியுள்ளார்.

தன் உறவினரான கருப்பணனுக்கு ஈரோடு மாவட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து தன்னை இழிவு படுத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தக்க பாடம் புகட்ட,அவர், சசிகலாவுடன் அணி சேரவிருக்கிறார் என்கிற கருத்து மேற்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் மத்தியில் உலவுகிறது.இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Response