ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது.
இத்தேர்தலில் எடப்பாடி அதிமுக போட்டியிடுமா? இல்லையா? என்கிற கேள்வி இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று சந்தித்த அனைத்துத் தேர்தலிலும் தோல்வியடைந்தன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. அதே முடிவை ஈரோடு இடைத்தேர்தலிலும் எடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தார். மீண்டும் ஒரு தோல்வியை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த நாளில் எடப்பாடியின் நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை காரணமாகவும், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் பாஜக அணியில் சேர்வது அவர்கள் ஆதரவில் தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அதிமுகவினர் மத்தியில் உலவும் தகவல்…
சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிமுகவினர் முதுகில் ஏறி தமிழ்நாட்டில் பாஜக கால்பதித்தே ஆக வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. எங்களுக்கும் தற்போதுள்ள நெருக்கடியில் வேறுவழியில்லை. இரட்டைஇலைச் சின்னமும் கைவிட்டுப் போய்விடக் கூடாது. எனவே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டுவிட்டோம். இரட்டை இலைச் சின்னம் விரைவில் எங்களுக்கு வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது. பொங்கலுக்கு அடுத்து பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என உறுதி கொடுத்துள்ளனர். அதிமுகவுடன் நட்புடன் இருக்கும் ஒருவர் பாஜகவின் தலைவராவார்
இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இதை நோக்கித் தான் அரசியல் கள்ம் சென்று கொண்டிருக்கிறது என்று கூறிய அரசியல்நோக்கர்கள்,இன்னும் சில நாட்களில் இவை அனைத்தும் நடக்கிறதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.