ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தலுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
2021 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் அதன்பின் 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதியில் காங்கிரசுக் கட்சி போட்டியிட்டது.முதலில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா அதன்பின் போட்டியிட்ட அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவருமே மறைந்துவிட்டதால் இப்போது இடைத்தேர்தல் நடக்கிறது.
அதனால்,இந்தமுறை இந்தத் தொகுதியில் காங்கிரசுக் கட்சி போட்டியிடவில்லை என்று தமிழ்நாடு காங்கிரசு தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது அத்தொகுதியில் திமுக சார்பாக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இவர் இந்தத் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.இத் தொகுதி உருவான 2011 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர்.அப்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார்.சில மாதங்களிலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறினார். பின்பு திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.
அவருக்கு இப்போது திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.திமுக கூட்டணி வலிமையாக இருப்பதால் இவரே சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிடுவார் என்று நம்பிக்கையாகச் சொல்லப்படுகிறது.