
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், பார்க், கடற்கரை, தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் காதலர்களின் தலைகளாக தென்பட்டது. இதில், மறைமுகமாகவும், நேரடியாகவும் சில அத்துமீறல்கள் நடந்தன.
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஏராளமான காதலர்கள் குவிந்திருந்தனர். செடி மறைவில் அமர்ந்து கொண்டும், ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்தபடியும் காதலர்கள் கூடி குலாவினர். அப்போது, இந்து முன்னணியினர் வஉசி பூங்காவில் திடீரென நுழைந்து காதலர்களை சுற்றி வளைத்தனர். அவர்களில் சிலர் தங்கள் முகம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை மறைத்தபடி ஒளிந்தனர். ஆனால், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து தங்கள் கையில் இருந்த மாலைகளை காதலர்களிடம் கொடுத்து ஒருவருக்கொருவர் மாலை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கு காதலர்கள் மறுத்தனர்.
அதை பொருட்படுத்தாத இந்து முன்னணியினர், ‘நீங்கள் காதலர்கள் தானே? திருமணம் முடிப்பதற்காக தானே காதலிக்கிறீர்கள். இப்போது மாலை மாற்றிக்கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?’ என காதலர்களிடம் கூறினர். மேலும் கைகளில் மஞ்சள் கயிற்றை வைத்து கொண்டு தாலி கட்டும்படியும் வற்புறுத்தினர். அவர்களின் செயலுக்கு காதலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதும், காதலர்களை விடாப்பிடியாக இந்து முன்னணியினர் தொந்தரவு செய்தனர்.
அவர்களிடம் சிக்கிய ஒரு ஜோடியை வலுக்கட்டாயமாக மாலை மாற்றச் செய்தனர். மஞ்சள் கயிற்றை கட்டச் சொல்லி மிரட்டியதால், இளம்பெண் ஒருவர் கதறி அழுதார். பின்னர், அவரை விரட்டியடித்தனர். இதை பார்த்த மற்ற ஜோடிகளும் பூங்காவில் இருந்து பீதியுடன் ஓட்டம் பிடித்தனர்.


