
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு, பணி எதுவும் வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பத்திரிகையாளர் அனைவரையும் தன்னுடைய அறைக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் அழைத்தார். பின்னர், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவுகள் குறித்து பேட்டி அளிக்கப்போவதாகக் கூறினார்.
அதற்கு நிருபர்கள், ‘உயர்நீதிமன்றத்தில் மத்தியப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், கேமராக்களை உள்ளே எடுத்துவர அனுமதிக்கமாட்டார்கள்’ என்று கூறினார்கள். இதையடுத்து, வாசலுக்கு நானே வருகிறேன் என்று கூறியபடி, நீதிபதி சி.எஸ்.கர்ணன் தன் சேம்பரில் இருந்து வெளியில் வந்தார்.
நீதிமன்ற நுழைவுவாயிலில் வைத்து, நீதிபதி சி.எஸ்.கர்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விளக்கம் கேட்காமல்…
ஐகோர்ட்டு நீதிபதியான எனக்கு எந்த ஒரு அலுவல் பணியும் வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. என்னுடைய கருத்தைக் கேட்காமல், இப்படி ஒரு உத்தரவு போட்டது தவறானது. சுப்ரீம் கோர்ட்டு தவறு செய்துவிட்டது.
கோவையில் சட்டப்பணி ஆணைக்குழு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த குழுவில், ஒரு தலித் நீதிபதிகூட இல்லை. இதுகுறித்து கேள்வி கேட்டேன். அதனால், எனக்கு எந்தப் பணியும் வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இது சாதி வெறிபிடித்த நாடு. இந்த நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். இன்னும் சொல்லப்போனால், என்னுடைய பிறப்பு உரிமையை ரத்து செய்துவிட்டு, சாதி வெறியில்லாத நாட்டிற்கு போகலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும். என் விளக்கம் எதுவும் கேட்காமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? நான் தலித் என்பதால், இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கின்றனர். ஆனால், என்னுடைய உத்தரவுகளில் சாதி சார்ந்து இருக்காது. நேர்மை, நீதிதான் எனக்கு முக்கியம். இரண்டு தலித் நீதிபதிகள் மீது தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஏற்கனவே நான் உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை நீதிபதி, அவர்களை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றார். ஆனால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவியான என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர்.
தலித் என்பதற்காக நான் கை கட்டி நிற்கவேண்டுமா?. இதனால்தான், நீதிபதிகள் நியமன ஆணையம் வரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்தேன். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு அந்த ஆணைய சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இவ்வாறு ரத்து செய்துவிட்டு, நீதிபதி பதவிக்கு தொடர்ந்து குறிப்பிட்ட சாதியினர் வரவேண்டும் என்று நினைக்கின்றனர். சாதி வெறிபிடித்த இந்த நாட்டில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். நாட்டை விட்டே வெளியேற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
