25 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் வெளியே வரவிருக்கிறார்- அற்புதம் அம்மா தகவல்

25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகன் பேரறிவாளன் பரோலில் வெளிவர கோரி முதல் முறையாக விண்ணப்பித்து இருக்கிறோம் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

25 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் எனது மகன் பேரறிவாளனுக்காக முதல்முறையாக பரோல் கோரி விண்ணப்பித்து இருக்கிறோம். வாரம், வாரம் நான் வேலூர் சிறைக்கு சென்று எனது மகன் பேரறிவாளனை சந்திக்கின்ற போதெல்லாம் தவறாக தண்டிக்கப்பட்டு விட்ட தான் நிரபராதி என்பதை நிரூபித்து நிச்சயம் விடுதலையாவேன் என ஆறுதல் கூறியதோடு, அதற்கான செயல்பாடுகளையும் விவாதிப்பான். அதேபோல் 25 ஆண்டு காலத்தில் பரோல் கேட்டு ஒரு நாளும் அவன் விண்ணப்பித்தது கிடையாது.

எனது மகன் உள்ளிட்டோர் விடுதலையை இன்று உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுப்பதும், தமிழகத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் எனது மகன் உள்ளிட்டோரின் விடுதலையை எங்களை போலவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுதலை அறிவிப்பு அறிவித்தும் தொடர்ந்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் எனது கணவர் ஞானசேகரன் (வயது 74) கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். ரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்துமா, மூட்டு வலி என பல்வேறு நோய்களால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறார். தற்போது நாங்கள் பார்த்து வந்த மருத்துவர்கள் எனது கணவரை மேல் சிகிச்சைக்கு பெரு நகருக்கு கூட்டிச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். எனது மகன் வந்து தான் கூட்டி செல்ல வேண்டிய சூழலினால் பேரறிவாளனை பரோலில் அனுப்பிவைக்கக் கோரி விண்ணப்பித்துள்ளோம்.

அதே சமயம் பரோலில் இருக்கிற போதே முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளன் உள்ளிட்டோரை சட்ட விதிகளின்படி விடுதலை செய்வார் என்கின்ற திடமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எனது கணவரின் உடல் நிலை கருதி முதல் கட்டமாக பரோல் பெற்று ஓரிரு நாட்களில் வெளியே வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response