
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (59). வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் பஜாரில் கைபேசிக்கடை வைத்திருந்தனர்.19.6.2020 அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்குக் காலத்தில் இரவில் நீண்டநேரம் கடையைத் திறந்ததாக,சாத்தான்குளம் காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.அங்குவைத்து விடிய விடிய தாக்கியதில் இருவரும் இறந்தனர்.
இதுதொடர்பாக சிபிஐ கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்,உதவிஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ்.சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை,காவலர்கள் முருகன்,முத்துராஜ்,சாமத்துரை, செல்லத்துரை,தாமஸ் பிரான்சிஸ்,வெயிலுமுத்து ஆகிய 10 பேரைக் கைது செய்து,மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.இதில்,பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார்.இந்தவழக்கில் எஞ்சிய 9 பேர் மீதான விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இந்தவழக்கில் அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.முத்துக்குமரன்,மார்ச் 23 ஆம் தேதி 9 காவலர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து தண்டனை விபரம் கடந்த 30 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றார்.
இதன்படி,30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய மற்றும் மாநிலஅரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,கூடுதல் விபரங்கள் தேவை எனக்கூறி மீண்டும் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2 ஆம் தேதி விசாரணையில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘குற்றவாளிகள் 9 பேருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும்.அரிதினும் அரிதான காவல் கொடூர கொலைவழக்குகளில் தூக்குத்தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றனர்.
அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனை விபரத்தை இன்று தெரிவிப்பதாகக் கூறி ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி முத்துக்குமரன் மாலை 5.30 மணியளவில் தண்டனை விபரத்தை தெரிவிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.
அதனடிப்படையில்,காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசித்தார்.
காவல்நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும்,இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துத் தாக்கியுள்ளனர்.இருவரும் வியாபாரிகள்.சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள்.அவர்கள் மீது எந்த குற்றவழக்கும் இல்லை என்றே தெரிகிறது.
குற்றவாளிகளைச் சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையைக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது.தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால்,கடுமையான குற்றமாகவே கருதவேண்டும்.பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள்,பொருளாதார அழுத்தத்தையோ,மனஅழுத்தத்தையோ காரணமாகக் கூற இயலாது.
சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.தந்தை மகன் இருவர் மீதும் பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்கவேண்டும்.சட்டதிட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர்.இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்கவேண்டும்.
ஒரேநேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது.சாதாரண நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.ஆனால் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்றச்செயல்களைச் செய்துள்ளனர்.
காவல்நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடிச்சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும்.அந்தவகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது.குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கமுடியும்.
வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவல்துறையினருக்கும் மரணதண்டனை விதிப்பதே சிறந்தது.இதுபோன்ற வழக்குகளில் ஆயுள்தண்டனை வழங்கினால்,இப்படி செயல்படும் காவல்துறையினருக்கு அச்சம் ஏற்படாது
இவ்வாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இந்தவழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரணதண்டனையுடன் ரூ.84 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதோடு, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ரூ.1.4 கோடி இழப்பீடு கொடுக்கவேண்டுமெனவும் அந்தத் தொகையை தண்டனை விதிக்கப்பட்ட 9 காவல்துறையினரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து இழப்பீடு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வெளியானதும் மரண தண்டனைக்கு எதிரானவர்கள்கூட இந்தத் தீர்ப்பை வரவேற்று வருகின்றனர்.


