சாத்தான்குளம் படுகொலைகள் – தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் கைது

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக கோவில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று இரவு உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை மற்றொரு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் வழியாகத் தப்ப முயன்ற ஸ்ரீதரை வழிமறித்த சிபிசிஐடி காவல்துறையினர், தூத்துக்குடி அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்குப் பின் ஸ்ரீதரை சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் – மரண வழக்கில் ஏற்கனவே ஸ்ரீதர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response