மோடியின் அறிவிப்பை வரவேற்றுப் பாராட்டும் பழ.நெடுமாறன்

ஜூன் 30 ஆம் தேதி பிரதம்ர் மோடி பேசும்போது, வருகிற நாட்கள் விழாக்களின் காலமாக உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி குரு பூர்ணிமாவும் அதைத்தொடர்ந்து ஆவணி மாதமும் துவங்குகிறது. பின்னர் ரக்‌ஷா பந்தன், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகள் தொடருகின்றன. இவை தவிர கட்டி பிஹூ, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா ஆகியவையும் வருகின்றன. இந்த விழாக்காலம் மக்களின் தேவைகளையும், செலவினங்களையும் அதிகரிக்கின்றது.

எனவே இதைக் கருத்தில் கொண்டு பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது இந்தத் திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை தொடரும்.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதத்துக்கு 5 கிலோ கடலைப்பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு மோடி அறிவித்தார்.

அவருடைய இந்த அறிவிப்புக்கு,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதின் விளைவாக ஏழை, எளிய மக்கள் குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் எந்த வேலைக்கும் போக முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு மாநில அரசுகள் அளித்துவரும் பண உதவி மட்டும் போதாது. எனவே, நடுவண் அரசின் சார்பிலும் பண உதவி அளிக்க முன்வருமாறு தலைமையமைச்சரை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response