இராமேசுவரம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் இலங்கைக் கடற்படையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவ்வமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கண்.இளங்கோ, நிர்வாகிகள் அய்யநாதன், பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பழ.நெடுமாறன் பேசியதாவது:-
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து இன்னல்களும், நஷ்டங்களும் ஏற்பட்டு வருகிறது. நமது மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
இருப்பினும் மத்திய அரசு இதுவரை இலங்கை அரசுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதிக்கே செல்ல முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினரின் தொல்லை உள்ளது. எனவே இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மோடி கண்டுகொள்ளவில்லை. இது விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 7½ கோடி மக்களையும் அவமதிப்பதாகும். எனவே அவர் உடனடியாக விவசாயிகளை சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்க வேண்டும்.
இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து கொண்டே செல்கின்றது.எனவே யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொள்ள மோடி,யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்.விஜயம் மேற்கொண்ட போது தமிழர்களின் விபரம் அம்பலமானது, எனவே இது போல் மோடியும் செல்ல வேண்டும்.
அ.தி.மு.க.வினர் இரு பிரிவுகளாக செயல்படுவது அவர்களது பதவியைக் காப்பாற்ற அடித்துக்கொள்கிறார்களே தவிர மக்கள் நலனைப்பற்றி அக்கறையில்லை. தமிழக அரசு நிர்வாகம் சீரழிந்து விட்டது. வரலாறு காணாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.