தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் – 2004 திரும்புகிறதா?

இந்திய ஒன்றியம் முழுவதும் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் அதாவது ஜூன் 4 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அவற்றில் பெரும்பாலும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசியல்பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது…

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தேர்தல் முடிவின்போது மாறியுள்ளன. இதற்கு சான்றுகள் உள்ளன. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு (2014-க்கு முன்) இதே போன்ற கருத்துக்கணிப்புகள் இரண்டு முறை பொய்யாகியுள்ளன.

1999-2004 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி முடிந்த பிறகு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அதில் காங்கிரசு தலைமையிலான கூட்டணியும், பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் சந்தித்தது.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 250 முதல் 275 வரையிலான இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் பாஜக பெற்றதோ வெறும் 181 இடங்கள் மட்டுமே. அந்தத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று காங்கிரசு ஆட்சியமைத்தது.

அதே போல் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரசுக் கூட்டணி 190 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரசுக் கூட்டணி 262 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. .

இதன்மூலம் தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது மாறும் என்று தெரிகிறது. அதே போல் தற்போது பாஜகவுக்கு சாதமாக வெளியான கருத்துக்கணிப்புகளும் தேர்தல் முடிவின்போது மாறும்

இவ்வாறு கூறியிருக்கின்றனர்.

அதோடு தற்போது வெளியான கருத்துக்கணிப்புகள் பாஜகவே பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரசு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இரண்டு நாட்களுக்கு முன்பே கூறியதாவது…

2004 இல் பெற்றதுபோல், தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மையை இண்டியா கூட்டணி பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மற்றொரு விசயத்தையும் சொல்கிறேன். 7 ஆம் கட்டத் தேர்தலின் முடிவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். 2004 இல் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறப் போகிறது எனக் கூறின. ஆனால், உண்மையான முடிவு வேறுவிதமாக இருந்தது.

என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னது போலவே கருத்துக் கணிப்புகள் வெளியாகிவிட்டன.அவர் சொன்னது போலவே முடிவு இருக்குமா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Response