இராகுல்காந்தி பிரதமர் ஆவதே என் விருப்பம் – கார்கே கருத்து

இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இதன் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்தத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதிலிருந்தே தற்போது ஆளும் பாஜக தோல்வியுறும் என்றும் காங்கிரசு தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

இந்தியா கூட்டணி வென்றால் காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் ஆவார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காங்கிரசுக் கட்சித் தலைவர் கார்கே தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி….

இந்தப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டால், இராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். இராகுல் காந்தி பலரால் பிரதமர் பதவிக்கான யதார்த்தமான ஒருமித்த வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார். இருப்பினும் நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நாங்கள் ஒன்றாக இணைந்து போராடுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

கூட்டணித் தலைவர்கள் எடுத்த முடிவு அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு யார் பிரதமர் என்பதை கூட்டாக முடிவு செய்வோம். பிரதமர் பதவிக்கு எனது பெயரை நான் எப்படி முன்மொழிவது? இதுபற்றி கட்சி முடிவு எடுக்கும். கூட்டணிக் கட்சிகள் எனது பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம்.

ஆனால், எங்கள் கட்சியில், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து முடிவு செய்வோம். 2004 மற்றும் 2009 இல் நடந்தது போன்ற தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே வை பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்கே இப்படிக் கூறியிருக்கிறார்.அவர் காங்கிரசு தொண்டர்களின் உணர்வுகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கிறார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

Leave a Response