சன் டிவிக்கு கடும் எதிர்ப்பு – மிரண்டது நிர்வாகம்

பழங்கால சமஸ்கிருத காவியங்களில் ஒன்று எனச் சொல்லப்படுவது இராமாயணம். இந்தக் காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது எனவும் சொல்லப்படுகிறது.

இராமர் தனது மனைவியைத் தொலைத்துவிட்டுத் தேடுவதும்,அவர் இராவணனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தெரிந்தபின் மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதே இராமாயணம். இதில் தான், கடவுள் விஷ்ணு ராமரின் அவதாரம் தோன்றியது என்றும் சொல்வார்கள்.

அயோத்தியைச் சேர்ந்த இரகு வம்ச இளவரசரான இராமர் குடும்பத்தைச் சுற்றியே இந்தக் கதை பயணிக்கும்.

இராவணனிடமிருந்து மனைவி சீதையை மீட்ட பிறகு அவர் களங்கமில்லாதவர் என்பதை நிரூபிக்க நெருப்பில் இறங்கச் சொன்னார் இராமர் என்றும் இது கடுமையான பிற்போக்குத்தனம் என்கிற விமர்சனங்களும் உண்டு.

இப்போது எதற்கு இந்த இராமாயணக் கதை?

தற்போது தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில், இராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. ’ சீதையின் இதயநாயகன் ‘ என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது எந்த நாளில் தொடங்கும், எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் தொடர்பான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ‘இராமாயணம்’ ஒளிபரப்பானது. தற்போது ஒளிபரப்பாக உள்ள இராமாயணம் அதே தானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இராமாயணம் என்கிற அறிவிப்பு வெளியானதுமே அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் இதுதொடர்பாகக் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், பார்ப்பனிய சனியன் தூர்தர்ஷன் செய்ததை சன் – சனியன் செய்கிறது.ஒழியட்டும் சனியன்கள்

என்று பதிவிட்டிருக்கிறார்.

மே பதினேழு இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி யின் பதிவில்…

சன் டிவியில் ‘இராமயணம்’ சீரியல்..
ஆரிய ஆதிக்கத்தின் அடையாளத்தை தமிழர் மண்ணில் விதைக்க முயலும் சன் நிறுவனத்தின் துரோகத்தனமான வணிகத்திற்கு எதிராக அணி திரளுவோம். திராவிட இயக்கத்தின் உழைப்பில் வளர்ந்து, பெரியாரின் அரசியலில் அதிகாரத்தைப் பிடித்து, தமிழ்நாட்டின் அரசியலின் வேருக்கு நஞ்சு பாய்ச்ச நினைப்பவர் எவராயினும் அவர் எம் பகைவரே.

வடவர் மதவெறி அரசியலை தமிழ்நாட்டில் வளர்க்க நினைக்கும் எவரும் எம் இனத்தின் துரோகிகளே.
பெரியாரின் சீடர்கள் செத்துவிடவில்லை சன்குடும்பத்தாரே!

சமரசமற்ற எம் தோழர்கள் கருப்புச் சட்டையுடன் களத்தில் எதிர்கொள்வோம் உம் ஈனச்செயலை!!
தேர்தல் முடியும் வரை காத்திருந்து கழுத்தறுக்க நினைக்கும் உம் அயோக்கியத்தனத்திற்கு தமிழினம் தக்கவகையில் பதில் சொல்லும்

என்று பதிவிட்டிருக்கிறார்.

இவைதவிர இன்னும் ஏராளமானோர் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத வகையில் சன் தொலைக்காட்சிக்கு எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பு கண்டு அந்தத் தொலைக்காட்சி நிர்வாகம் மிரண்டுபோயிருக்கிறதென்கிறார்கள்.

Leave a Response