
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றபோது அனைத்து நாடுகளுக்கும் விதித்த வரிக்கு வரி அடிப்படையில் இந்தியாவுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது.இரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 விழுக்காடு வரி விதித்தது.இதனால் மொத்த வரி 50 விழுக்காடாக உயர்ந்தது.
இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் பேசிய டிரம்ப் திடீரென இந்தியா மீதான வரிக்கு வரியான 25 விழுக்காட்டை 18 விழுக்காடாகக் குறைத்தார்.
இரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யை இந்தியா அடியோடு நிறுத்திவிட்டதால் அதற்கு விதிக்கப்பட்ட 25 விழுக்காடு வரியையும் இரத்து செய்யப்போவதாகவும், மேலும் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் இரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 விழுக்காடு கூடுதல் வரி இரத்து செய்யப்பட்டு, மொத்த வரி 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.
நேற்று முதல் (பிப்ரவரி 7,2026) இந்த வரிக்குறைப்பு அமலுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அதை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை இருநாடுகள் சார்பிலும் வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.45 இலட்சம் கோடி அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ரூ.27 இலட்சம் கோடி பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா சம்மதித்து உள்ளதாக டெல்லியில் பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.ஆனால், இது பற்றி இருநாட்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தால் மருந்துப் பொருட்கள், வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்குப் பூஜ்ஜியம் விழுக்காடு வரி விதிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஜவுளி, தோல் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் இரப்பர் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகளுக்கு 18 விழுக்காடு வரி மட்டுமே இனிமேல் வசூலிக்கப்படும்.
அதே நேரத்தில், இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பால், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற உணர்திறன் மிக்க விவசாயத் தயாரிப்புகளுக்கு இந்தியா தனது வரிப் பாதுகாப்பைத் தொடர்ந்து நீட்டித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் அதிநவீன கணினி பாகங்கள் மற்றும் தரவு மைய உபகரணங்களை வாங்கவும், விமானப் போக்குவரத்துத் துறையில் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.9 இலட்சம் கோடி மதிப்பிலான விமானங்கள் மற்றும் இன்ஜின்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த இடைக்கால கூட்டறிக்கை அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் உடனே அமலுக்கு வந்தாலும், சட்டப்பூர்வ ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாக உள்ளது. அதன்பிறகு முறைப்படி இந்தியா பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா குறைக்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா விவசாயம்,கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட கிராமப்புற பொருளாதாரத்தை நம்பி உள்ளது. இது 70 கோடிக்கும் அதிகமான வேலைகளை வழங்குகிறது. எனவே ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒப்பந்தங்களில் விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டும் இந்தியா வரிச்சலுகை வழங்கவில்லை. ஆனால் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு வரிகளை இரத்து செய்துள்ளதால் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியியுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இந்த அறிவிப்பு சிறந்த செய்தியாகும்.இருநாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இது ஒரு நல்ல செய்தி.
நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இது இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறுகுறு தொழில் முனைவோர், ஸ்டார்ட்அப் கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே அதிக சாதகம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…
இந்தியா மற்றும் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை,எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது ஓர் இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல.இது ஓர் இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு மட்டுமே. இந்தக் கூட்டறிக்கையில் உள்ள இரண்டாம் பத்தியும், பல்வேறு துணைப் பிரிவுகளும் இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்குகின்றன. 2.4.2025, 5.9.2025, 8.3.2018, 30.7.2025, 17.5.2019 ஆகிய தேதிகளில் அமெரிக்கா பிறப்பித்த உத்தரவுகளைப் படித்து ஆய்வு செய்யாதவரை, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளின் சரியான தன்மையை புரிந்து கொள்வது சாத்தியமற்றது.
ஆனால் ஒரு விசயம் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சமச்சீரற்ற தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு எப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய விசயமாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரேர் கூறுகையில்…
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்பந்தம் அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றைத் திறக்கிறது.இந்த அறிவிப்பு,இரு நாடுகளிலும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதால்,அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகளை நிரூபிக்கிறது.
பரந்த அளவிலான விவசாயப் பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது அல்லது வரியை நீக்குவதால் இனி எந்தவித தடையும் இல்லாமல் அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியாவில் விற்க மிகப்பெரிய சந்தை கிடைத்துள்ளது என்றார்.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஒப்பந்தம் அல்ல, நாட்டின் சுயமரியாதை மற்றும் நலன்களை சரணடைதல் ஆகும். இது இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் செய்யும் துரோகம் என்று காங்கிரசின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,…
இந்தியா விரைவில் அமெரிக்கப் பொருட்களுக்கான குப்பைத் தொட்டியாக மாறும்.இது இங்குள்ள விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் நலன்களைப் பாதிக்கும்.இந்த ஒப்பந்தம் கடந்த 75 ஆண்டு இந்திய வளர்ச்சிக்கு செய்த துரோகமாகும்.இது நமது நலனுக்கான ஒப்பந்தம் அல்ல.இது வேறுயாருமல்ல நரேந்திரனால் செய்யப்பட்ட முழுமையான சரணடைதல் ஆகும்.இரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்கா,இந்தியாவை ஒரு திருடன் என்று முத்திரை குத்துகிறது என்றார்.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் கூறுகையில்….
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.27 இலட்சம் கோடி சந்தையை இந்த ஒப்பந்தம் திறந்து விட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கானோர் வேலை பெறுவார்கள்.
அதே நேரத்தில், சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால், புகையிலை, சில காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் கிராமப்புற வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றார்.
இரஷ்யாவில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்காவிடம் இந்தியா உறுதியளித்துள்ளது.இதனால் நேற்று முதல் இரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீதான 25 விழுக்காடு வரிகளை அமெரிக்கா ஒரு தனி நிர்வாக உத்தரவின் மூலம் நீக்கியுள்ளது. இந்தியா மீண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்குகிறதா? என்பதை அமெரிக்க அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
இந்தியா மீண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கண்டறிந்தால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 25 விழுக்காடு கூடுதல்வரி மீண்டும் விதிக்க வேண்டுமா அல்லது எந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு விவசாய சங்கங்களான எஸ்கேஎம், ஏஐகேஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பிப்ரவரி 12 ஆம் தேதி கிராமங்களில் போராட்டங்கள் நடத்தப்படும். டிரம்ப் மற்றும் மோடியின் உருவ பொம்மை எாிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


