தலைகீழாக மாறிய டிடிவி மற்றும் சசிகலா – திடீர் திருப்பம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் துரோகி எடப்பாடி பழனிச்சாமிக்குச் சரியான பாடம் புகட்டுவேன்.அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கமாட்டேன் என கூறிவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திடீரென அதிமுக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டார்.

இதனால் பெரும்பாலான அமமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.அமமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மாணிக்க ராஜா,அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அமமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மகளிர் பிரிவு இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து தற்போது மாணவியர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ஜீவிதா நாச்சியார் அமமுகவிலிருந்து விலகியிருக்கிறார்.

இவர்,நேற்று சசிகலா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதோடு, மாண்புமிகு சின்னம்மா அவர்களை இன்று சந்தித்தேன்.

என்மீது அன்பும் அக்கறையும் கொண்டு எப்போதும் எனக்கு துணையாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி…

எங்கு இருந்தாலும் நாம் அரசியலுக்கு வந்த ஒரே நோக்கம் துரோகத்தை வேரறுப்பதுதான்…

அதைச் செய்வோம்.

என்று பதிவிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியை வேரறுப்பதுதான் ஒரே நோக்கம் என்கிற பொருள்பட அவர் பதிவிட்டதும், அமமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கு, முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் பி.ஜீவிதா நாச்சியார் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலாவைச் சந்தித்த பின்பு துரோகத்தை வேரறுப்பதுதான் ஒரே நோக்கம் என்று ஜீவிதா நாச்சியார் பதிவிட்டிருக்கிறார்.இதுவரை எடப்பாடி பழனிச்சாமியுடன் இணக்கமாகச் செல்லவேண்டும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு அதுதான் சரி என்று சொல்லிக் கொண்டிருந்த சசிகலா,எடப்பாடியின் பிடிவாதம் காரணமாக அவரை அழிக்கத் துணிந்துவிட்டார் அதன் வெளிப்பாடுதான் இந்நிகழ்வு என்றும் இதுவரை எதிராக இருந்த டிடிவி.தினகரன் எடப்பாடியுடன் இணங்கிப் போயிருப்பதும் இதுவரை இணக்கமாகப் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த சசிகலா அதற்கு மாறாக எதிர்நிலை எடுத்திருப்பதும் பரபரப்பான திடீர் திருப்பம் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response