
எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து செயல்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தே.ஜ. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஓபிஎஸ்சை அதிமுகவிலும் சேர்க்கமாட்டேன், கூட்டணியிலும் சேர்க்கமாட்டேன் என எடப்பாடி திட்டவட்டமாகக் கூறிவருகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார் ஓபிஎஸ்.
இதனால் அவருடன் இருந்த நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்று விட்டனர். இன்னும் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு தாவவும் தயாராகி வருகின்றனர். ஓபிஎஸ், திமுக அணிக்கு செல்லப்போகிறார், தவெக பக்கம் சாயப்போகிறார் என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் கிளம்பின.
இந்நிலையில் மவுனமாக இருந்து வந்த ஓபிஎஸ் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களில் ஓபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எப்படி இந்தத் திருப்பம்?
ஓபிஎஸ்,சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறிவருகிறார்.
இதனால் ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்க்கிற விசயத்தில் மந்தமாக இருந்த பாஜக,இப்போது திடீரென கண்விழிக்கக் காரணம் சசிகலா என்று சொல்லப்படுகிறது.
சசிகலா,கடந்த சில நாட்களாக தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.அவர் தனித்துக் களம் காணவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு ஓபிஎஸ்ஸையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சசிகலா,ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து தனித்துக் களம் கண்டால், அதிமுக கூட்டணி கண்டிப்பாகப் படுதோல்வியைத் தழுவும்.இதனால் அவர்கள் இருவரும் சேரக்கூடாது எனத் திட்டமிட்டே பாஜக,ஓபிஎஸ்ஸை அழைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இரண்டு நாட்களில் தில்லியில் அமித்சாவைச் சந்திக்கும் ஓபிஎஸ்,மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது அவருடன் மேடையில் ஓபிஎஸ்சும் ஏறுவார் எனக்கூறுகின்றனர். பார்ப்போம்.


