சசிகலா தலைமையில் ஓபிஎஸ் இராமதாசு பிரேமலதா – புதிய பரபரப்பு

இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தேர்தலில்,திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, விஜய் கட்சி என நான்குமுனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிரடித் திருப்பமாக இன்னொரு கூட்டணி அமையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்த சசிகலா தலைமையில் புதிய அரசியல் அணி உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்.

கடந்த மூன்று நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா.அந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலிருந்தும் பலர் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில் இந்தத் தேர்தலில் தனித்துக் களம் காண்பது என்கிற திடமுடிவுக்கு சசிகலா வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதோடு, சசிகலா தலைமையை ஏற்று சில கட்சிகள் அவரோடு சேரத் தயாராக இருப்பதாகப் பேச்சு இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, தேமுதிக தலைவர் பிரேமலதா ஆகியோரைச் சேர்த்து ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

சசிகலாவின் அரசியல் அனுபவங்களோடு ஓ.பன்னீர்செல்வம், மருத்துவர் இராமதாசு, பிரேமலதா போன்றோரின் ஆதரவும் இணைந்தால் அந்த அணி, தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.இதனால் தமிழ்நாடு அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலரங்கில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்தத் தகவலால் எடப்பாடி பழனிச்சாமி பதறிப் போயுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response