
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 116 நகராட்சிகள் மற்றும் 7 மாநகராட்சிகளுக்கு கடந்த 11 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
இதில் ஆளும் காங்கிரசுக் கட்சி, பிஆர்எஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது.
116 நகராட்சிகளில் உள்ள 2,569 வட்டங்களிலும் 412 வட்டங்களைக் கொண்ட 7 மாநகராட்சிகளிலும் 73.01 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது.
இதில் மாலை 6 மணிநிலவரப்படி மொத்தம் உள்ள 116 நகராட்சிகளில் காங்கிரசுக் கட்சி 65 நகராட்சிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அதற்கு அடுத்தபடியாக பி.ஆர்.எஸ். கட்சி 15 இடங்களைப் பிடித்தது. சுயேட்சை ஒரு இடம் பிடித்தது. ஆனால் பாஜக ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை. 32 இடங்களில் எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தலைவர் பதவி கிடைக்காமல் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் 7 மாநகராட்சிகளில் 4 இடங்களை காங்கிரசும், 2 இடங்களை பாஜகவும், சுயேட்சை ஒரு இடமும் பிடித்துள்ளது.பி.ஆர்.எஸ் கட்சி ஒரு மாநகராட்சியைக் கூடப் பிடிக்கவில்லை.
414 மாநகராட்சி வட்டங்களில் 377 வட்டங்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரசு 175, பி.ஆர்.எஸ். 53, பாஜக 73, சுயேட்சை 76 இடங்களைப் பிடித்துள்ளது.
நகராட்சியில் உள்ள 2,581 வட்டங்களில் 2,544 வட்டங்களில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரசு 1,323 வட்டங்களிலும், பி.ஆர்.எஸ். 716, பாஜக 258, சுயேச்சை 247 வெற்றி பெற்றிருந்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பதும் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


