நயினார் நாகேந்திரன் அறிவித்த புதியகுழு – எடப்பாடி அதிர்ச்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.ஏற்கெனவே இருக்கும் தேசிய சனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்திருப்பதாக பாஜகவினர் சொல்கிறார்கள். இந்திய ஒன்றிய அளவில் இந்தக் கூட்டணிக்கு பாஜக தலைமை வகிக்கிறது தமிழ்நாட்டில் அதிமுகதான் தலைமை வகிக்கிறது என்று இரண்டு கட்சியினரும் சொல்கிறார்கள்.

ஆனால், நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் தமிழ்நாட்டிலும் அக்கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஜகவே எடுத்துக் கொண்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.

அக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், வருகின்ற சட்டமன்றத் தேர்தல்-2026 ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினைப் பெற்றிடும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுச்சேர்த்திட, பாஜக சார்பில் மாநிலக் குழு அமைக்கப்படுகிறது.

அந்தக் குழுவின் தலைவராக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, துணைத் தலைவராக முன்னாள் டிஜிபியும் மாநில செயற்குழு உறுப்பினருமான ஜி.பாலச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டணித் தலைமை அதிமுகதான் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் மேலும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்க்க பாஜகவே குழு அமைத்திருப்பது பெரும் முரணாக இருக்கிறது.இதனால், நான் தான் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response