அண்ணாமலை ஆதரவாளர் பதவி பறிப்பு – திடீர் நிகழ்வால் பரபரப்பு

தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சிச் சிக்கல் தொடர்பாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ்,தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன்,அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், கட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து,ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகியது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தின் முடிவில்,கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவவிநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டார்.இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பதவியில் இருந்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் இருந்து வருபவர்கள் மட்டுமே இந்தப் பதவியில் இருந்து வருகிறார்கள். அதேபோல தேசிய அளவில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக இருப்பவர்தான் பி.எல்.சந்தோஷ்.

தமிழ்நாட்டில் தற்போது கேசவவிநாயகம் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் பதவி காலியாகி உள்ளது.அவர் மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் திரும்பியுள்ளார்.

புதிய மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை பா.ஜ.க தேர்தல் நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ். கூட்டுக் குழு மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பதவி நீக்கப்பட்ட கேசவவிநாயகம்,அண்ணாமலைக்கு நெருக்கமானவராக இருந்தார்.அண்ணாமலையிடம் பல காணொலிகள்,ஒலிப்பதிவுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் கேசவ விநாயகமும் இருப்பதாகக் கூறப்பட்டது. அதனால் அவர் அண்ணாமலையின் தீவிர நண்பராக மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால் அவரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.குறிப்பாக அண்ணாமலை மாற்றப்பட்டபோது அவரையும் மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.ஆனால் கேசவவிநாயகத்தை மாற்றாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பும்,பாஜகவும் அமைதி காத்தது.

அண்மையில், அண்ணாமலை கட்சி அறிவித்த தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பை ஏற்கவியலாது என்று சொன்ன நிலையில் இப்போது அவருடைய தீவிர ஆதரவாளரான கேசவவிநாயகத்தை அதிரடியாக நீக்கியிருப்பது தமிழ்நாடு பாஜகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response