காங்கிரசு கூட்டணி வெல்லும் – மோடியைத் தொடர்ந்து அமித்ஷாவும் ஒப்புதல்

பிகார் மாநிலம் ஜன்ஜார்பூரில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

கடந்த 10 ஆண்டுகளாக நிலையான ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தந்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணியான இண்டியா கூட்டணியில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் பதவி மோகத்துக்காக அலைகின்றனர்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்.

திரிணமூல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். அதன் பின்னர் வாய்ப்பிருந்தால் காங்கிரசு மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவியை வகிப்பார்.

இண்டியா கூட்டணி சொல்வதைப் போல ஒரு நாட்டை இப்படியெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக நிலையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையைக் கொடுத்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைமை கிடைத்திருப்பதன் மூலம் கொள்கை, வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றிலும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது.

அயல்நாடுகளில் இந்தியாவின் அதிகாரம், வலிமையைப் பாராட்டுகின்றனர். இந்த முறையும் நாட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமித் ஷா இவ்வாறு பேசுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு பரப்புரைக் கூட்டத்தில் பேசும்போது, எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இண்டியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்துக்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்கத் திட்டமிட்டு வருகின்றனர் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே கருத்தை வலியுறுத்தி அமித் ஷாவும் பேசியிருக்கிறார்.

இதை வைத்துக் கொண்டு,முதலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று பேசிய மோடி அமித்ஷா ஆகியோர் போகப்போக இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியே வெல்லும்,வென்றால் என்ன நடக்கும்? என்று பேசுகின்றனர்.

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதை முதலில் மோடி ஒப்புக்கொண்டார்,அதற்கடுத்து அமித்ஷாவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response