கர்நாடகா தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

15 ஆவது கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதி முடிகிறது.16 ஆவது சட்டப்பேரவைக்கு கடந்த 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

பாரதிய ஜனதா கட்சி 224, காங்கிரசு 223, மஜத 207, ஆம் ஆத்மி 219 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். மொத்தம் 5,30,85,566 வாக்காளர்களில் 3,88,51,807 பேர் வாக்களித்தனர். 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருவில் உள்ள பத்து மையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 34 மையங்களில் எண்ணப்பட்டன.

ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக மற்றும் காங்கிரசு வேட்பாளர்கள் சம பலத்தில் வாக்குகள் பெற்றனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து காங்கிரசு முன்னிலை வகித்து வந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பின், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

1989 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 178 இடங்களைக் கைப்பற்றியது. அதன் பின் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய வெற்றியை தற்போது காங்கிரசுக் கட்சி பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா 65 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டி கட்சியான கேஆர்பிபி 1 தொகுதியிலும் கர்நாடக விவசாய சங்கம் 1 இடத்திலும் வெற்றி பெற்றது, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்தத் தேர்தலில் நேற்றுவரை முதல்வராக இருந்த பசவராஜ்பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரசு தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.எச்.முனியப்பா, முன்னாள் துணைமுதல்வர் டாக்டர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், சாமனூர் சிவசங்கரப்பா, ஈஸ்வர்கண்ட்ரே, எச்.டி.ரேவண்ணா , ராமலிங்கரெட்டி உள்பட பலர் வெற்றி பெற்றனர்.

பசவராஜ்பொம்மை தலைமையிலான அரசில் முதல்வர் உள்பட 25 பேர் அமைச்சரவையில் இருந்தனர். இதில் 12 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர்.

சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி (சிர்சி), அமைச்சர்கள் சங்கர் மூனனேகொப்பா ( நவலகுந்தா), ஹாலப்பா ஆச்சார் (யலபுர்கா), வி.சோமண்ணா (வருணா மற்றும் சாம்ராஜ்நகர்), கோவிந்த கார்ஜோள் (முத்தோள்), பி.ஸ்ரீராமுலு (பல்லாரி ஊரகம்), ஜே.சி.மாதுசாமி (சிக்கநாயகனஹள்ளி), சி.சி.பாட்டீல் (நரகுந்தா), முருகேஷ் நிரானி( பீளகி).டாக்டர் சுதாகர் (சிக்கபள்ளாபுரா), எம்.டி.பி.நாகராஜ் (ஒசகோட்டை), கே.சி.நாராயணகவுடா (கே.ஆர்,பேட்டை), பி.சி.நாகேஷ் (திப்டூர்) ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

காங்கிரசு பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டம், காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

இதில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

காங்கிரசு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளதால், கட்சியின் சட்டமன்றக் கட்சித்தலைவராக, கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகிய இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி கட்சித்தொண்டர்களிடம் அதிகரித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பின் பேட்டி அளித்த காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

காங்கிரசு இல்லாத இந்தியாவை விரும்பியவர்கள் எங்களுக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் இன்று ஒன்று உண்மையாகி விட்டது. அதுவே, ‘பாஜக இல்லாத தென்னிந்தியா’. இனியும் அகங்கார பேச்சுகள் உதவாது. மக்களின் துன்பத்தை அவர்கள் (பாஜக) புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவில் வெற்றி யாருடைய தனிப்பட்ட வெற்றியும் அல்ல. இது நமது கூட்டு முயற்சி, ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response