ஆர்சிபி போல் இந்தியா கூட்டணி வெல்லும் – வலைதளக் கொண்டாட்டம்

நடப்பு ஐபிஎல் சீசனின் 68 ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் 27 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக அந்த அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருந்தது.

போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் 201 ரன்களை கடந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இருந்தது.

இந்தச் சூழலில் இலக்கை விரட்டியது சிஎஸ்கே. முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே, 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா, 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஷிவம் துபே மற்றும் மிட்செல் சான்ட்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் பேட் செய்ய தோனி வந்தார். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 90 ரன்கள் தேவைப்பட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே 72 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. ஜடேஜா மற்றும் தோனியின் அனுபவம் கைகொடுக்கும் என சிஎஸ்கே அணி இரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கடைசி ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்தில் சிக்சர் விளாசினார் தோனி. 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்று அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷர்துல் தாக்குர் பேட் செய்ய வந்தார். மூன்றாவது பந்து டாட், அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் ஷர்துல். கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா, ரன் எடுக்க தவறினார். அவர் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. இந்த ஆட்டத்தில் 27 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது ஆர்சிபி. அதற்கு முன்பு ஆடிய 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது.

பல விமர்சனங்களைக் கடந்து ஆர்சிபி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சிஎஸ்கே உடனான அந்த அணியின் கடைசி லீக் போட்டியில் நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது. அதிலும் ஆர்சிபி வென்றது. மழை அச்சுறுத்தல் இருந்த நிலையில் அதையும் கடந்து வாகை சூடியுள்ளது.

இந்த வெற்றியை அரசியலோடு இணைத்துப் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.சிஎஸ்கே வை பாஜகவாகவும் ஆர்சிபியை இந்தியா கூட்டணியாகவும் உருவகம் செய்து பல்வேறு தடைகளைத் தாண்டி சிஎஸ்கே வை ஆர்சிபி தோற்கடித்தது போல இந்தியா கூட்டணி பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று சமூகவலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பல தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்த ஆர்சிபி அடுத்தடுத்த ஆட்டங்களில் அதிரடி காட்டி நடப்பு சாம்பினனை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறியது போல் இந்தியா கூட்டணியும் முன்னேறுகிறது என்றும் கூறுகின்றனர்.

Leave a Response