உபியில் பாஜகவுக்கு ஒரே தொகுதிதான் – இராகுல் உறுதி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியின் உஜ்வால் ராமன் சிங்கை ஆதரித்து நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தியும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது உராகுல் பேசியதாவது….

நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறப் போகிறது. அது பிரதமர் மோடியின் கியோட்டோ தொகுதி (வாரணாசியை ஜப்பானின் கியோட்டோ நகரைப் போல மாற்றிக் காட்டுவேன் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார். அதை கேலி செய்யும் வகையில் இராகுல் கியோட்டோ என குறிப்பிட்டார்).

இந்தத்தேர்தல் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியலமைப்பைத் தாக்குகின்றன. எந்த சக்தியாலும் அரசியலமைப்பைக் கிழித்து எறிய முடியாது என்பதை நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். அக்னிவீரர் திட்டத்தை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவோம். இராணுவத்தில் பழைய முறையப்படியே வீரர்கள் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கூறினார்.

புல்பூர் பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் கூட்டம் அலைமோதியது. காவல்துறையினரின் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி தொண்டர்கள் முண்டியடித்தனர். இதனால் இராகுல், அகி லேஷ் யாதவ் ஆகியோர் பரப்புரை செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

இப்படி உத்தரபிரதேசம் முழுவதிலும் இராகுல் காந்திக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பு காரணமாக இந்தமுறை உபியில் பாஜக ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெல்லும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் ஒரே ஒரு தொகுதிதான் கிடைக்குமென இராகுல் கூறியிருக்கிறார்.

Leave a Response