பலவீனமாகிறது ஜாபர் சாதிக் வழக்கு – புதிய தகவல்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜாபர் சாதிக்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு.

இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய அமலாக்கத்துறை உள்ளே வந்துள்ளது.

பல சோதனைகள் நடத்தியும் அமலாக்கத்துறையால் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால், சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றது அமலாக்கத்துறை.

அதன்படி மே 8,9,10 ஆகிய நாட்களில் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும் நேரத்தில் ஜாபர் சாதிக்குடன் அவருடைய வழக்குரைஞரும் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாபர்சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும் நேரத்தில் அவருடைய வழக்குரைஞர் பிரபாகரன் உடனிருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி வழக்குரைஞர் பிரபாகரன் உடனிருக்கிறார்.

ஜாபர் சாதிக்கிடம் சிறையில் வைத்தே வாக்குமூலம் வாங்குவதால் அமலாக்கத்துறையினர் அத்துமீறல்களில் ஈடுபடவியலாத நிலை. இந்நிலையில் வழக்குரைஞரும் உடனிருப்பதால் தவறாகவோ கூடுதலாகவோ எதையும் எழுதி கையெழுத்து வாங்கிவிட முடியாத நிலையில் அமலாக்கத்துறையினர் இருக்கின்றனராம்.

இதனால் அமலாக்கத்துனையினரால் ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்யவியலுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொரு புறம், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை 153 பக்கங்கள் மட்டுமே இருக்கிறதாம். 97 ஆவணங்கள் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனவாம்.

அதிலிருக்கும் 42 சாட்சியங்களும் பெரும்பாலும் காவல்துறையினர்தாம் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் காரணங்களால் ஜாபர் சாதிக் மீதான வழக்கு மிகவும் பலவீனமாகிவிட்டதென்றும் வழக்கு விசாரணைக்கு வந்தால் ஜாபர் சாதிக் மீதான குற்றங்களை நிரூபிக்க முடியாதென்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response