4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று – விவரங்கள்

இந்திய ஒன்றியம் முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

ஏப்ரல் 19 அன்று முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், மே 7 அன்று மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடக்க உள்ளது.

இதில், 17.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.

இதன் மூலம் தென் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலத்திலும் இன்றுடன் மக்களவைத் தேர்தல் நிறைவடைகிறது.

இதே போல மத்திய பிரதேசத்தில் இன்று தேர்தல் நடக்கும் 8 தொகுதிகளுடன் அம்மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நிறைவடைகிறது.

இம்மூன்று மாநிலங்களைத் தவிர பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 4, மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, உபியில் 13, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

இதில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (கன்னோஜ் தொகுதி, உபி), ஒன்றிய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் (பெகுசராய், பீகார்), நித்யானந்த் ராய் (உஜியார்பூர், பீகார்), காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் (இருவரும் பஹரம்பூர் தொகுதி, மேற்கு வங்கம்), நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான சத்ருகன் சின்கா (அசன்சோல், மேற்கு வங்கம்), ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைசி (ஐதராபாத், தெலங்கானா), திரிணாமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா (கிருஷ்ணாநகர், மேற்கு வங்கம்) மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா (கடப்பா) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.

ஏற்கனவே நடந்த மூன்று கட்டத் தேர்தல்களில் 283 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்றைய தேர்தலுடன் சேர்த்து 379 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் முடிவடையும்.

அடுத்ததாக வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்டத் தேர்தலும், 25 ஆம் தேதி 6 ஆம் கட்டத் தேர்தலும், ஜூன் 1 ஆம் தேதி ஏழாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தலும் நடைபெறும்.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது.

ஜெகன் மோகனின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை எதிர்த்து சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மும்முனைப்போட்டி நிலவுகிறது.

Leave a Response