தமிழீழ விடுதலைக்காகப் போராடிய
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்தத்தடையை ஒன்றிய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. எல்டிடிஇக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிக்கையில், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 இன் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மேலும் 5 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தனி நாடு குறித்த கோரிக்கையைக் கைவிடாமல் நிதி சேகரிப்பு உள்ளிட்ட இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இயக்கத்தைச் சேர்ந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை நீட்டிக்கப்படுகிறது’
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம் என்று சிங்கள அரசு கூறிவருகிறது.இந்நிலையில் அவ்வமைப்பு இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறதென இந்திய அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.