மேகதாது அணைச் சிக்கல் – அமைச்சர் துரைமுருகன் தந்த ஆறுதல்

கர்நாடக மாநில சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடந்தது.நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.சம்பந்தப்பட்ட துறையினரின் சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் எனத்தெரிவித்தார்.

கர்நாடக முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.அரசியல்பட்சித் தலைவர்களும் விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்களும் இதைக் கண்டித்தனர்.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…..

கடைசியாக நடந்த காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் கூட மேகதாது அணை விவகாரம் கொண்டுவரப்பட்டது.அப்போதே நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம்.மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கலாம், குழு அமைக்கலாம்.ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் அணைகட்ட முடியாது.

மேகதாது அணை பற்றி கர்நாடகா அரசு தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. எந்தக் காலத்திலும் மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. அதுதான் சட்டம், அதுதான் நியதி.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது.இந்நேரத்தில் அமைச்சர் துரைமுருகனின் இந்தக் கருத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக காவிரிப் பாசன விவசாயப் பெருமக்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது.

அதேநேரம் இது சொல்லோடு நில்லாமல் செயலிலும் இருக்க வேண்டுமென தமிழ்நாட்டு அரசிடம் அனைவரும் எதிர்பார்க்கிறாரகள்.

Leave a Response