எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் எங்கே சென்றார்?

எடப்பாடி பழனிச்சாமி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்து சேலத்தில் முகாமிட்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எந்த ஊருக்குச் சென்றாலும் அவருடனேயே செல்வார்கள். சேலத்திற்கு வந்தால் மாநகர ஆயுதப்படையில் இருந்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள். எங்கு சென்றாலும் அவருடனே செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, சேலம் காவல்துறை பாதுகாப்பை நிறுத்திவிட்டு, மத்திய தொழில்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான சிலுவம்பாளையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் எங்கே போனார்? என்பது தெரியவில்லை.அவரைக் காணவில்லை என்கிறார்கள். அவரைப் பார்க்க சேலம் வீட்டிற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர் எங்கே இருக்கிறார்? என உளவுப் பிரிவுக்கும் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி எங்கு இருக்கிறார்? என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் கோவையில் இருப்பதாகவும், சிலர் கேரளாவில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். அவர் சென்னை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் எங்கு செல்கிறோம் என்ற தகவலை தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சேலத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வெளியே சென்ற எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்களுக்குப் பிறகு சேலத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று வந்தார். மாலை 5 மணியளவில் அவர் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டிற்கு வந்தார்.

அவர் கேரளாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. தனக்குள்ள எதிரிகளை அழிக்கும் வகையில் கேரள நம்பூதிரிகள் நடத்திய யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response