13 மாநிலங்களில் இருந்து 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், 41 உறுப்பினர்கள் ஏற்கெனவே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். காங்கிரசு மூத்த தலைவர் சோனியா காந்தி,பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா,ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ்,எல்.முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால்,மீதமுள்ள 15 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றதை அடுத்து,மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
உத்தரப் பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் ஒன்று என மொத்தம் 15 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்த மூன்று மாநிலங்களிலும் நடைபெற்றது.
கர்நாடகாவில் காங்கிரசு சார்பில் அஜய் மக்கான்,சையது நசீர் ஹுஸைன்,ஜி.சி.சந்திரசேகர் ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.பாஜக சார்பில் நாராயண்சா பண்டேஜ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டி ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.
இதில், காங்கிரசுக் கட்சியின் மூன்று வேட்பாளர்களும்,பாஜகவின் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் மக்கான் 47 வாக்குகளையும்,சையத் நசீர் ஹூசைன் 46 வாக்குகளையும்,ஜி.சி.சந்திரசேகர் 46 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.பாஜக வேட்பாளர் நாராயண பண்டேஜ் வெற்றி பெற்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வி அடைந்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார்,
காங்கிரசுக் கட்சியின் ஒற்றுமையை இந்தத் தேர்தல் வெளிக்காட்டியுள்ளது.அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி.காங்கிரசுக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி.வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்,முதலமைச்சர் சித்தராமையா, கட்சியின் நிர்வாகிகள், காங்கிரசுத் தலைவர்கள் சோனியா காந்தி, இராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தேர்தலில், கர்நாடகாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.சோமசேகர் கட்சி மாறி காங்கிரசு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கர்நாடகத்தில் பாஜகவும் மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து செயல்பட்டுவரும் நிலையில் இந்தத் தேர்தல் முடிவு அவர்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.