முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சாந்தன் மறைவு குறித்து இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.அந்தத் துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம்.அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்குத் திரும்புவார்.அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார்.அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது.சுயநினைவை இழந்தார்.செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்றார்.
சாந்தனின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்…..
இராசீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்று பின்னர், உச்சநீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாக்கப்பட்டு 31 ஆண்டு காலமாக இருண்ட சிறையில் வாடிய சாந்தன், அதே உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டும்கூட சிறப்பு முகாம் என்னும் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல்நலம் குன்றியிருக்கக் கூடிய அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்குச் செவி சாய்க்க இந்திய அரசு மறுத்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சாந்தன் உயிர் துறந்த செய்தி அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.உச்சநீதிமன்ற ஆணையிட்டபடி உடனே விடுதலை செய்திருந்தால்,அவர் தமிழீழம் சென்று தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பார்.அவர்களின் அன்பான பராமரிப்பில் உயிர் பிழைத்திருக்கக் கூடும்.
சாந்தனுக்கு நேர்ந்த கதி மற்ற மூவருக்கும் நேர்ந்துவிடக் கூடாது.எனவே, சிறப்பு முகாமில் இருக்கக் கூடிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு,31 ஆண்டுகள் சிறையில் சொல்லொண்ணாத வேதனைகளுக்கு ஆளாகி இறுதியில் மறைந்து போன சாந்தன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.