சாந்தன் இறுதிநிகழ்வு – தமிழீழத்தில் தமிழ்த்தேசியத் துக்க தினம்

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு பிப்ரவரி 28 காலை அவர் உயிர் துறந்தார்.

அவரது உடல் விமானம் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டது.விமானநிலையத்தில் அவர் உடலை உறவினர்களிடம் கையளிக்க பல் இடையூறுகளை ஏற்படுத்தினர்.அங்கு மறு உடற்கூறாய்வு செய்துதான் தருவோம் என்று சொல்லி அப்படியே செய்துள்ளனர்.இவற்றைத் தாண்டி அவர் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அவருடைய இறுதிச் சடங்குகள் குறித்து அவருடைய சகோதரர் மதிசுதா வெளியிட்டுள்ள பதிவில்…

இன்றைய தினம் (மார்ச் 3,2024) சாந்தன் அண்ணாவின் புகழுடல் காலை 8:00 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.அதைத் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாங்குளத்திலும் காலை 10:30 மணிக்கு கிளிநொச்சியிலும் அதனைத்தொடர்ந்து 11:30 மணிக்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கொடிகாமம் ஊடாக புகழுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2: 00 மணி தொடக்கம் 3:00 மணி வரை வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகள் உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சாந்தனின் இறுதிநிகழ்வுகளையொட்டி,இன்றைய நாளை தமிழ்த் தேசியத் துக்க தினமாகக் கடைபிடிக்க வேண்டுமென்றும் இன்று கொண்டாட்டங்களை தவிர்க்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் நேற்று கூறியதாவது…

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய் மண்ணிற்கு எடுத்துவரப்படவுள்ளது.

காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூறும் வகையில் கறுப்புக் கொடிகளைத் தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

அன்றைய தினம் தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து அமரர் சாந்தனிற்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response