கர்நாடகா சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடந்துவருகிறது.பிப்ரவரி 22 அன்று, கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியது அரசு. இந்த சட்டத் திருத்தத்தின்படி, ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வருமானம் வரும் இந்துக் கோயில்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள இந்துக் கோயில்களுக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு ஏன் வரி விதிக்கப்படவில்லை? என அந்தக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியதாவது…..
ஆளும் காங்கிரசு அரசு இந்துக்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளது. சித்தராமையா அரசு தவறான திட்டங்களுக்கு அதிகளவில் நிதியைச் செலவிடுகிறது.அதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி இல்லாமல் தள்ளாடுகிறது.
இதனைச் சமாளிக்க இந்துக் கோயில்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.இந்துக் கோயில்களின் வருமானத்தை பிற திட்டங்களுக்குச் செலவிடுவதை ஏற்க முடியாது.காணிக்கை செலுத்தும் பக்தர்கள் அந்தப் பணத்தில் கோயிலைப் புதுப்பிக்கவும்,பராமரிக்கவும் வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.இந்துக் கோயில்களுக்கு வரி விதிக்கும் முறையை முஸ்லிம் மன்னர்கள் அறிமுகப்படுத்தினர்.இதனை இப்போது சித்தராமையா செய்திருக்கிறார்.இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.
இவ்வாறு விஜயேந்திரா தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்து முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது….
இந்தச் சட்டத்தைப் புதிதாக நாங்கள் கொண்டு வரவில்லை.2003 ஆம் ஆண்டில் இருந்தே இந்துக் கோயில்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது.இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக,மஜத ஆட்சியிலும் இந்தச் சட்டம் அமலில் இருந்தது.நாங்கள் அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.5 விழுக்காடாக இருந்த வரியை நாங்கள் 10 விழுக்காடாக உயர்த்தி இருக்கிறோம்.
பாஜகவினர் இதனைக் குறைக்கச் சொல்லாமல், இந்துகளுக்கு எதிரான சட்டம் எனக் கூறுகின்றனர்.இந்தப்பணம் அர்ச்சகர்களின் நலன்,கோயில் புனரமைப்பு, யாத்ரீகர்களுக்கான வசதிகள் ஆகியவற்றுக்காகவே பயன்படுத்தப்படும். ஒரு போதும் வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படாது.
ஆனால் பாஜக தலைவர்கள் அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். வகுப்புவாத அரசியல் மூலம் வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிக்கும் பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.