இராகுல்காந்திக்கு இடைக்கால வெற்றி

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, “ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லாத் திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த நிலையில், மார்ச் 23 ஆம் தேதி இராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.சர்மா தீர்ப்பளித்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆவது பிரிவுகளின் கீழ் இராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக இராகுல் காந்திக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், இராகுல் காந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இராகுல் காந்தி நேற்று மேல்முறையீடு செய்தார். தனது தண்டனையை இரத்து செய்யக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்ததை இரத்து செய்யக் கோரி மற்றொரு மனுவும் இராகுல் காந்தி தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, இராகுல் காந்திக்கு பிணை வழங்கினார். மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்தார். இந்த மனுக்கள் மீது வரும் 10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளி என அறிவித்ததை இரத்து செய்யக் கோரிய மனு மீது வரும் 13 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார். இராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், அவரது பதவி தகுதி இழப்பு இரத்தாகும்.

இதுகுறித்து இராகுல் காந்தியின் வழக்கறிஞர் ரோகன் பான்வாலா கூறும்போது, “குஜராத் நீதிமன்றம் இராகுல் காந்திக்கு பிணை வழங்கியிருக்கிறது. தண்டனையையும் நிறுத்தி வைத்திருக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது இராகுல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இவை இராகுல்காந்திக்கு இடைக்கால வெற்றி என்று சொல்லப்படுகிறது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேத்தன் ரேஷம்வாலா இதுபற்றிக் கூறும்போது, “இராகுல் காந்தியின் மனுக்கள் தொடர்பாக ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மனுதாரர் புர்னேஷ் மோடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 13 ஆம் தேதி எங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்போம். குறிப்பாக, இராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்யக் கூடாது என்று வாதிடுவோம். அன்றைய தினம் வழக்கின் உண்மையான நிலை தெரியவரும்” என்றார்.

இதுகுறித்து இராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம். உண்மையே எனக்குத் துணை. இந்தியாவுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவேன். இதற்காக என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response