தமிழகத்தில் மட்டும் ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – இராகுல்காந்தி கேள்வி

மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தற்கொலை செய்த அனிதாவின் குடும்பத்தினரை நடைபயணத்தின்போது சந்தித்த இராகுல்காந்தி, ‘எந்த மாநிலத்திலும் எதையும் திணிக்க மாட்டோம்’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தின்போது, அனிதாவின் தந்தை சண்முகம், அவரது சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் நேற்று காலை இராகுல்காந்தியை நேரில் சந்தித்தனர்.
அவர்களுடன் இராகுல்காந்தி உரையாடினார். அவர்கள் தமிழில் கூறியதை ஜோதிமணி எம்.பி இராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில் விவரித்தார்.

அப்போது அவர்களை விலக்க முயன்ற தனது பாதுகாவலர்களையும் ஓரம்கட்டிவிட்டு அவர்களிடம் நடந்துகொண்டே பொறுமையாக விபரங்களைக் கேட்டறிந்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை அனிதாவின் குடும்பத்தினர் இராகுல்காந்தியிடம் முன் வைத்தனர். மேலும் தாங்கள் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் இராகுல்காந்தியிடம் அளித்தனர். அந்த மனுவை இராகுல்காந்தி முழுமையாக வாசித்து விபரங்களைக் கேட்டறிந்தார்.

அப்போது அவர்களிடம் இராகுல் காந்தி, எந்த மாநிலத்திலும் நீட் உட்பட எதையும் திணிக்க மாட்டோம், அது காங்கிரசுக் கட்சியின் கொள்கை அல்ல என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பின்னர் மணிரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது……

இராகுல்காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தைஜ் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதை அறிந்தேன். அவரைச் சந்திப்பதற்காக நான் வந்திருந்தேன். கடந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என இராகுல்காந்தி கூறியிருந்தார். தற்போது கன்னியாகுமரி வந்துள்ள அவரிடம் நினைவூட்டினோம். மீண்டும் அதை வலியுறுத்த அவரைச் சந்தித்தோம். ஜோதிமணி எம்.பி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தற்போது நீட் தேர்வுக்கு அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முதல் குரல் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது. நீட் தேர்வால் எனது தங்கை அனிதா மரணம் அடைந்தார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சி தான் வெற்றி பெறப்போகிறது. அந்த நேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

நான் சொன்னதை அவர் காது கொடுத்துக் கேட்டார். நேரு குடும்பத்தினர் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினர். இராகுல்காந்தி தற்போதைய ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கட்சிகளிடமிருந்து இந்தியாவை மீட்கப் போராடுகிறார். மாநில அரசின் கோரிக்கைகளை ஏற்காத அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மாநில அரசின் கோரிக்கைகளை கேட்கும் அரசாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். அதற்கு இராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு இராகுல்காந்தி தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என்று கேட்டார். எதிர்காலத்தில் நிகழக்கூடியதை முன்கூட்டியே தெரிந்து செயல்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனால் தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்.

எந்த மாநிலத்திலும் நீட் உட்பட எதையும் திணிக்க மாட்டோம், அது காங்கிரசுக் கட்சியின் கொள்கை அல்ல என்று இராகுல்காந்தி தெரிவித்தார்.

இவ்வாறு மணிரத்தினம் கூறினார்.

இந்தச் சந்திப்பு குறித்து இராகுல்காந்தி பதிவிட்டிருப்பதாவது….

மறைந்த அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது சகோதரர் மணிரத்னம் ஆகியோரை இன்று சந்தித்தேன். அவளது கதை, மற்றும் அவரது குடும்பம் அனுபவிக்கும் துயரம் இதயத்தை உலுக்கச் செய்கிறது.
நீட் நம் மாணவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது. இவ்வாறான தேர்வுகளை அறிமுகப்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் கவனமாக கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும்.ஒரு ஆதிக்க முறையில் திணிக்கப்படக்கூடாது, மாறாக, அவர்களின் கனவுகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலங்கள் இதில் அடங்கியிருக்கிறது.
அனிதா குடும்பத்திற்கு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளேன். அவர்களின் போராட்டத்தில் நான் அவர்களுடன் நிற்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது நமது முனைப்பு.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response