இந்தி படித்தவர்கள் இங்கு பானிபூரிதானே விற்பனை செய்கிறார்கள்? – ஆளுநர் முன் பொன்முடி அதிரடி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது.
பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார்.

விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது….

விழாவில் மொத்தம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 569 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 251 பேர் பெண்கள் ஆவார்கள். தற்போது தமிழகத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் உயர் கல்வி படித்து வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல்.

தமிழகம் இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. நாட்டில் உயர் கல்வி பயில்வதில் தமிழகம் 53 விழுக்காடாக இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைத் தனது இரு கண்களாகக் கருதுகிறார். கல்வித்துறை, தொழில்துறை மற்றும் தொழிலாளர்துறை ஆகியவை சார்பில் மாணவர்கள் படிக்கும்போதே தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மேடையில் வைத்து ஆளுநருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்தியைப் படிக்கட்டும், அதில் தவறு இல்லை. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியை மாற்று மொழியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதை எக்காரணத்தைக்கொண்டும் கட்டாயமாக்கித் திணிக்கக்கூடாது.

தமிழகத்தில் தாய்மொழியான தமிழ், உலகளாவிய அளவில் இருக்கும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று பலர் கூறினார்கள். ஆனால் இந்தி படித்தால் வேலை கிடைக்கிறதா? இல்லையே. இந்தி படித்தவர்கள் இங்கு பானிபூரிதானே விற்பனை செய்கிறார்கள்?

நாங்கள் உலகளாவிய அளவில் உள்ள ஆங்கில மொழியைப் படித்து வருகிறோம். பின்னர் எதற்கு எங்களுக்கு மாற்று மொழி?. எங்களுக்கு எங்களின் தாய்மொழியான தமிழும், மற்றொரு மொழியான ஆங்கிலமும் போதும். தமிழகத்தில் எப்போதுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களைப் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை எங்கள் தாய்மொழியில்தான் பின்பற்றுவோம்.

தமிழக முதலமைச்சர் மாணவர்களுக்காக தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்தக் குழுவின் அடிப்படையில் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்படும். ஆளுநரிடம் எங்கள் உணர்வை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அதை அவர் புரிந்து கொண்டு ஒன்றிய அரசிடம் எங்களின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். இந்தி மாற்றுமொழிதான். அதைக் கட்டாயமாக்கக்கூடாது. மாணவர்கள் 3 ஆவது மொழியாக என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். இதுதான் தமிழகக் கல்விக் கொள்கைக் குழு மூலம் செயல்படுத்தப்படும். பெண்கள் உயர் கல்வியில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் சிறந்த மாணவர்களை உருவாக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். பட்டம் பெற்றவர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Response