நூல்விலை கடும் உயர்வு – ஒன்றிய அரசுக்கு எதிராக விசைத்தறிக் கூடங்கள் வேலைநிறுத்தம்

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று விசைத்தறிக் கூடங்கள் நடத்துவோர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் வருகிற 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத் தொழில் கூடங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

இதுகுறித்து எடப்பாடி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது…

விசைத்தறிகளுக்குப் பயன்படுத்தப்படும் 10 ஆம் நம்பர், 20 ஆம் நம்பர், 40 ஆம் நம்பர் நூல்களின் விலை 6 மாதத்திற்கு முன்பிருந்ததை விட, தற்போது 75 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி விலைக்குக் கூட, துண்டுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தைக் குறைக்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை.

எனவே 12 ஆம் தேதி (நேற்று) முதல் வரும் 18 ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்க வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதற்கு சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பல்வேறு சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வரும் 16 ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. தற்போது நடக்கும் வேலை நிறுத்தத்தால் நெசவாளர்கள், சாயம் ஏற்றுபவர்கள், துண்டு முடிச்சு போடுபவர்கள் என்று 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு, அறிவித்தபடி நூல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும். இதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Response