எடப்பாடி விஜய் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி – நடந்தது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நடிகர் விஜய்யின் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதிமுகவைச் சேர்ந்த இவர், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்தவர்.இவர் 3 மாதங்களுக்கு முன்பு தவெகவில் சேர்ந்தார்.உடனே அவருக்கு எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுக ஒரு ஊழல்கட்சி எனவும், இத்தேர்தல் களத்தில் அதிமுக இல்லை எனவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, விஜய்க்கு அரசியலில் எதுவுமே தெரியாது என பதிலடி கொடுத்தார். அதற்கு எடப்பாடி தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி சரியான பாடம் கற்பிக்கப்படும் என விஜய் கூறினார்.

ஆனால் தனக்கு எதிராக தவெகவே போட்டியிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதற்கான வேலையிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வேட்புமனு கடைசிநாளில் அவரது சட்டநிபுணர்களை களம் இறக்கினார்.அவர்களும் என்ன செய்யவேண்டுமோ? அதனை வெற்றிகரமாகச் செய்தனர்.

இந்நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் தவெக வேட்பாளர் அருண்குமாரும் கலந்து கொண்டார். திடீரென கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், மீண்டும் திரும்பி வரவில்லை. அவர் எங்கே போனார்? என்று தெரியவில்லை. அவருடைய கைபேசியும் அணைத்துவைக்கப்பட்டது.வேட்புமனு பரிசீலனையில், 10 பேர் முன்மொழிவுக்குப் பதிலாக 8 பேரும், மாற்று வேட்பாளரான அவரது மனைவி நித்யாவுக்கு 7 பேரும் முன்மொழிந்திருந்தனர். இதையடுத்து தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வேட்பாளரும் அங்கு இல்லாததால் கோபம் அடைந்த அவர்கள் வேட்பாளர் விலை போய்விட்டார் என முழக்கமிட்டனர். அவரை கடத்திச் சென்றுவிட்டனர் என்றும் குமுறினர்.அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரத்தில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வேட்பாளர் அருண்குமார் செயல்பட்டுள்ளார் என்ற தகவல் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்குத் தெரியவந்தது. அவர்,முன்னாள் சமஉ எஸ்.இ.வெங்கடாசலத்தை எடப்பாடிக்கு அனுப்பிவைத்தார்.அங்கு வேட்பாளர் இல்லாததால் அவரும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,வேட்பாளர் அருண்குமார் காலையில் வந்திருந்தார்.கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவரைக் காணவில்லை.அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பதும் தெரியவில்லை.எடப்பாடி தொகுதியில் தவெகவிற்கு 30 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தால், என்னென்ன தவறு இருக்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.தவறு இருந்தால் அதனை திருத்தித்தருமாறு கேட்பார்கள்.ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவை அதிகாரிகள் திட்டமிட்டுத் திரும்பப் பெற்றுள்ளனர்.இதில் பெரும் கூட்டுச்சதி இருக்கிறது என்றார்.

Leave a Response