அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.இதனால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை 20 ஆம் தேதி (திங்கள்) காலை 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனுவை 21 ஆம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெறலாம். போட்டி இருந்தால் வருகிற 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தத் தடை விதிக்குமாறு மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த அவசர முறையீடு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிட்டதாவது:
பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரே ஒரு வேட்பு மனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. வேறு எவரும் தாக்கல் செய்யவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நிரந்தரப் பொதுச்செயலாளராக கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அறிவித்து விட்டு, தற்போது விதிகளுக்குப் புறம்பாக கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து புதிய பொதுச்செயலாளரை நியமித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் விருப்பம். வெள்ளிக்கிழமை காலை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு விசாணைக்கு வந்து தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிர பொதுச்செயலாளர் பதவியை வேறு எவரும் வகிக்க முடியாது. சிறிய சங்கங்களுக்குக் கூட தேர்தல் நடத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 7 நாட்கள் நோட்டீசாவது வழங்கப்படும். ஆனால் இந்தத் தேர்தலில் அந்த அவகாசம் வழங்கப்படவில்லை. கட்சி விதிகளுக்கு முரணாக இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம். எனவே இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால் பொதுக்குழு தீர்மானம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் செல்லாததாகிவிடும். எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
வைத்தியலிங்கம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதிடும் போது,
1 கோடியே 55 இலட்சம் அடிப்படை தொண்டர்களின் மூலம் தான் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய முடியும். ஆனால் மாவட்டச் செயலாளர்களின் ஒப்புதலைப் பெற்று அதன் அடிப்படையில் இந்தத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தொண்டர்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படாமல் அவசரகதியில் இந்தத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் ஆஜராகி,’உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் தன்னிச்சையாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து வழக்குகள் தொடர எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. அந்த அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்காவிட்டால் எங்கள் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் காலாவதியாகிவிடும்’ என்று வாதிட்டார்.
இவற்றையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிடும்போது,
உள்கட்சி விவகாரத்தில் கோர்ட் தலையிடகூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் பணி தொடங்கி விட்டால் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பல தீர்ப்புகளில் தேர்தல் நடத்தலாம் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 37 பேர் அவரது பெயரில் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தேதி அறிவிப்பில் தவறு எதுவும் இல்லை. தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கூடாது. தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோர முடியாது.
இது அதிமுக உள்கட்சி விவகாரம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. மனுதாரர்களுக்கு கட்சியில் ஆதரவு இல்லை. இவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதை நிரூபிக்கச் சொல்லுங்கள். 8 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும். ஒரே தலைமை வர வேண்டும் என்பது தான் கட்சி உறுப்பினர்களின் கருத்து. பொதுக்குழு தான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கோர முடியாது.
அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் மனுதாரர்கள் செயல்படுகின்றனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கண்டிப்பாகத் தடைவிதிக்கக் கூடாது. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தும், ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. தேர்தல் பணி தொடங்கி விட்டால் நீதிமன்றம் தலையிட கூடாது என்றார்.
அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு 4 முறை தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன்பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற நிலை நிலவியது. பலர் வழக்கு போட்டனர். அப்போதும் பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. அதிமுக கட்சி விதி தெளிவாக உள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருக்கிணைப்பாளர்களை 1.50 கோடி தொண்டர்கள் உருவாக்கினர். அதை மீற முடியாது என்று கூற முடியாது. பொதுக்குழு சர்வ அதிகாரமும் கொண்டது. தேர்தல் பணி தொடங்கி விட்டால் கோர்ட் உள்கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளது. கட்சியில் உள்ள 2643 பொதுக்குழு உறுப்பினர்களில் 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என்றார்.
இந்த வாதங்களுக்குப் பின் நீதிபதி,
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசியம், பொதுக்குழு வழக்கு ஏப்ரல் 11 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்து வழக்கு இருக்கும்போது இந்தத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 22 இல் பிரதான வழக்கு விசாரிக்கப்படும். தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது. வழக்கு விசாரணை வரும் 22 ஆம் தேதி நடைபெறும். 24 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும். அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.