2022 ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் பொதுக்குழு கூட்டப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்
இதேபோல், தங்களை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து, வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் தரப்பில், “அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இன்று முதல், வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இரட்டைத் தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமையை உருவாக்கிக் கொண்டுவரப்பட்ட, தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பொது செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று அவசர முறையீடு செய்யப்பட்டது.
இந்த அவசர முறையிட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு நாளை (மார்ச் 19) விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக ஞாயிறு காலை 10 மணியளவில் விசாரிக்கப்படவுள்ளது.
அதிமுக உட்கட்சிச் சண்டையால் ஞாயிற்றுக்கிழமையிலும் உயர்நீதிமன்றம் செயல்பட வேண்டியுள்ளது.