பல்லடத்தைப் பின் தள்ளியது பங்களாதேஷ் காரணம் பாஜக – கமல் குற்றச்சாட்டு

கோவை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்லடம் எம்ஜிஆர் சாலையில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

இது, குரோதி ஆண்டு என்று சொல்வார்கள். எந்த குரோதமும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும். பன்முகத்தன்மை கொண்ட பல்லடம் என்றும் அவ்வாறே இருக்கவேண்டும். பல்லடம் பகுதியில், விசைத்தறி, ஆயத்த ஆடை, பிராய்லர் கோழி வளர்ப்பு, விவசாயம் என நான்கு தொழில்கள் முன்னணியில் உள்ளன.

ஆனால், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தத் தொழில்கள் முன்புபோல் இல்லை. கடும் சரிவை நோக்கிச் செல்கிறது. இது, வேதனை தருகிறது. இதுபோல், நன்றாக ஓடிக்கொண்டிருந்த பல வண்டிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் நின்றுபோய்விட்டது. மக்களுடன் ஒன்றாத அரசாக, ஒன்றிய பாஜக அரசு உள்ளது.

ஜிஎஸ்டி வரி கொங்கு மண்டலத்தைக் கொஞ்சம் அழித்துவிட்டது. இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த ஜிஎஸ்டி வரும்போது, நான் அன்றே குரல் கொடுத்தேன். சினிமா துறையை அது வெகுவாகப் பாதிக்கும் என்று அன்றே சொன்னேன். பெரும்பாடு பட்டு, ஆதிக்க சக்தியாக இருந்த கிழக்கிந்திய கம்பெனியை நம் நாட்டைவிட்டு, அனுப்பி வெச்சோம். ஆனால், இப்போது நார்த் இந்தியா கம்பெனி வந்து பாடாய்ப்படுத்துகிறது. இங்கே நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்னை பற்றியும் ஒன்றிய பாஜக அரசுக்குக் கவலை இல்லை. அவர்களுக்கு வேண்டிய, ஒருசில பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சலுகை தந்து கொண்டிருக்கிறார்கள், இது நிஜம்.

பல்லடம் போன்ற நகரங்கள், உலகத் தரத்திற்கு முன்னேறிச் செல்லும்போது, அதைப் பின்தள்ளியது அந்த ஜிஎஸ்டி வரிதான். பங்களாதேஷ் இப்போது நம்மை முந்திவிட்டது. அங்கே, ஜிஎஸ்டி வரி, நம்மைவிடக் குறைவு. பெட்ரோல், டீசல் விலையும் நம்மைவிடக் குறைவு.பங்களாதேஷில் இருந்து துணி, மணியை இறக்குமதி செய்து, இங்கே நம் தொழிலை அழித்து விட்டார்கள்.

பணம், மதிப்பிழப்பு செய்து, கறுப்புப் பணத்தை எல்லாம் காணாமல் செய்துவிடுவோம் என்றார்கள். அதை நம்பி, நானும் ஒரு பாராட்டுக் கடிதம் போட்டேன். ஆனால், என்ன ஆச்சு…? அந்தப் பாராட்டுக் கடிதத்தை, 2 மாசம் கழித்து வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று.

இந்திய பெண்கள் ஜனத்தொகையில், 43 சதவீதம் பெண்கள் தமிழகத்தில் வேலைக்குப் போகிறவர்கள். இந்த திராவிட மாடல், நல்ல மாடலா? இல்லையா? வரும் 2047 இல் உலக வல்லரசாக இந்தியா மாறும் என மார்தட்டுகிறார்கள். ஆனால், இன்றைய நிலையில், 35 சதவீத குழந்தைகள், அரைப் பட்டினியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response