கோத்தபய இராஜபக்சேவின் தந்திரம் பிரதமர் மோடி தலையிட பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை……

ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமையமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபய இராசபட்சே “விடுதலைப்புலிகளுடன் தொடர்புக்கொண்டதற்காக நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதில் தனக்கு தயக்கம் இல்லை” என்று ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தேரசியிடம் உறுதி அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால், கடந்த காலத்தில் தலைமையமைச்சராக இருந்த மகிந்த இராசபட்சேயும், அப்போது பாதுகாப்புத்துறைச் செயலாளராக இருந்த கோத்தபய இராசபட்சேயும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் இந்த வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்படும் என்பதில் ஐயமில்லை.

2009 இல் போர் முடிந்த மறு ஆண்டான 2010 இல் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக அப்போதைய செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அறிவித்தார். ஆனால், இந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க தலைமையமைச்சர் மகிந்த இராசபட்சே பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

2012 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு மறுத்துவிட்டது.

2013 ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று விசாரணை நடத்த முற்பட்ட போது, அவருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க தலைமையமைச்சர் மகிந்த இராசபட்சே மறுத்து புறக்கணித்தார். ஆனாலும், மனித உரிமை ஆணையர் இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நேரடியாகப் பல உண்மைகளைக் கண்டறிந்து அறிக்கை அளித்தார். அதில் குறிப்பாக, எத்தகைய விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும் என வற்புறுத்தியிருந்தார். அவரது அறிக்கையை முழுவதுமாக தலைமையமைச்சர் இராசபட்சே அரசு ஏற்க மறுத்துவிட்டது.

2014 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் போர் மீறல்கள் குறித்து சர்வதேச புலன்விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. ஆனால், இந்த விசாரணைக் குழுவைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்கவே இராசபட்சே அரசு மறுத்துவிட்டது.

மீண்டும் 2019 ஆம் ஆண்டு இராசபட்சே சகோதரர்கள் பதவிக்கு வந்த பிறகு “இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது சிங்கள இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கான 1.2 இலட்சம் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம்” கடந்த வாரத்தில் அறிவித்தது. ஆனாலும், ஐ.நா.வையோ, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தையோ, அவற்றின் ஆணைகள் எதையுமே சிறிதளவுகூட மதிக்காத இராசபட்சே சகோதரர்கள் இனிமேலும் மதிப்பார்கள் என்பதை உலகம் நம்பவில்லை.

ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் தான் பேசும்போது பிரச்சனை எதுவும் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக கோத்தபய இராசபட்சே மிகத் தந்திரமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். நாட்டிற்கு அவர் திரும்பிச் சென்ற பிறகு சிறையில் வாடும் தமிழர்களை விடுவிப்பார் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை.

எனவே, ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இந்திய தலைமையமைச்சர் மோடி அவர்கள், இலங்கை அதிபரிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response