அதிமுக கொண்டுவந்த தமிழர் விரோதச் சட்டத்தை திமுக இரத்து செய்யவில்லை ஏன்? – பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்/

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

கனவுகள் பல சுமந்து கல்விச் சாலைகளில் கற்று வெளிவரும் நம் இளையோர் வேலை இல்லை என்ற பாலையில் வீழ்கிறார்கள். இளமையை வறுமை தின்கிறது!

ஆனால், இந்திக்காரர்களும் இன்ன பிற அயல் மாநிலத்தாரும் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக, அலுவலர்களாக, தொழிலாளர்களாக, தொழில் முதலாளிகளாக, காவல் துறையினராக, வணிகர்களாக, திரைத் துறையினராக, ஊடகத்துறையினராக, மாணவர்களாக, மருத்துவர்களாக, செவிலியர்களாக, இன்னபிற துறையினராக பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கிறார்கள்! வாழ்ந்து பார்க்கிறார்கள்.

கர்நாடகம், குசராத், மராட்டியம், மேற்கு வங்கம், சத்தீசுகர் போன்றவை மாநில அரசு, இந்திய அரசு மற்றும் தனியார் துறை வேலைகள் தங்கள் தங்கள் மாநில மக்களுக்கே என்று அரசு ஆணைகள், சட்டங்கள் இயற்றியுள்ளன. அங்கெல்லாம் சட்டப்பாதுகாப்பு செய்த ஆட்சிகள் -அவற்றின் கட்சிகள் இந்தியத்தேசியத்தில் இயங்குபவை!

அண்மையில் பா.ச.க.வின் அரியானா அரசும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஆந்திர அரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஜார்க்கண்ட் அரசும் தனியார் துறையில் 75 விழுக்காடு வேலை, மண்ணின் மக்களுக்கே என்று சட்டம் இயற்றின. அம்மாநிலங்களின் ஆளுநர்கள் அச்சட்டங்களுக்குக் கையொப்பமிட்டார்கள்.

ஆனால், மாநிலக் கட்சிகள் ஆண்டுவரும் தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலைக்கான சட்ட ஏற்பாடு எதையும் செய்யவில்லை. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016 இல் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வை (TNPSC) இந்தியா முழுவதும் உள்ளவர்கள் எழுதி இங்கு வேலை பெறலாம்; தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேலையில் சேர்ந்த பின் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று சட்டத்திருத்தம் செய்தது. இச்சட்டத்திருத்தத்தை அப்போது தி.மு.க. எதிர்க்கவில்லை. அதற்கு முன் இருந்த தி.மு.க. ஆட்சியும் மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான சட்டம் இயற்றவில்லை.

இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள தி.மு.க.வும் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்கான சட்ட ஏற்பாடுகள் செய்யவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணி, தமிழ்நாடு அரசு நிறுவனப் பணி ஆகியவற்றுக்கான தேர்வில் தமிழ்மொழி ஒரு தேர்வுத் தாளாக இருக்கும் என்பதை மட்டுமே அண்மையில் சட்டப்பேரவையில் தி.மு.க. ஆட்சி அறிவித்தது.

தமிழ்நாட்டில் குவிந்துள்ள பிற மாநிலத்தவரும், தமிழில் தேர்வெழுதுவர். பிற மாநிலங்களில் வாழ்வோரும் தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கான தேர்வெழுதலாம் என்று அ.தி.மு.க. ஆட்சி செய்த திருத்தத்தை இன்றையத் தி.மு.க. ஆட்சி – இரத்துச் செய்யவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டு அஞ்சல்துறைப் பணிகளுக்கான தேர்வில் தமிழில் ஒரு தாள் இருந்தது. அத்தமிழ்த்தேர்வில் அரியானாக்காரர்கள் மொத்த மதிப்பெண் 25க்கு 23 வாங்கியது அம்பலமானது! ஊழல் வழியாக – தமிழர்கள் விடைத்தாளை எழுதிக் கொடுக்க அதை இணைத்துக் கொடுத்து, இந்திக்காரர்கள் தமிழில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்ற சதி அம்பலமானது. அத்தேர்வு முடிவுகள் இரத்துச் செய்யப்பட்டன.

தி.மு.க. தனது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை 2021 – பத்தி 196-இல் பின்வருமாறு உறுதி கொடுத்தது.

“196. தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும்”.

இந்தத் தேர்தல் உறுதிமொழியைச் செயல்படுத்த தி.மு.க. ஆட்சி, நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்கள்” என்று தி.மு.க. கூறுவதில் இந்திய அரசுத் தொழில் நிறுவனங்கள் வருமா? தமிழ்நாடு அரசுத் தொழில் நிறுவனங்கள் வருமா? தெரியவில்லை!

தொழில், வணிகத் துறைகளில் மார்வாடி – குசராத்தி சேட்டுகளும் இதர வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திர – கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கோலோச்சுகிறார்கள். அதற்கு மேல் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டை விழுங்கிக் கொண்டுள்ளன.

தமிழ் முதலாளிகள், தமிழ்த்தொழில் முனைவோர் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதிகளில் மார்வாடி – குசராத்தி உள்ளிட்ட வடநாட்டவர்களுக்கே வாய்ப்புகளை வாரி வழங்குகிறது இந்திய ஆட்சி; சலுகைகள் தருகிறது. அதிலும் தமிழர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கல்வியில் இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணிக்கவும், இந்திக்காரர்களைத் திணிக்கவும் மோடி அரசு ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துகிறது. வருங்காலத்தில் நீட் தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் திணிக்கப்படுவர். தமிழ்நாட்டுக் கல்வி தமிழர்களுக்கே ஆக வேண்டும்! நீட் தேர்வை நீக்க வேண்டும்.

தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு, தொழில், வணிகம், கல்வி நிலையங்கள் அனைத்திலும் தமிழர்களுக்கு மிகப்பெரும் விகிதம் கிடைக்கப் பின்வரும் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசிடம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது.

கோரிக்கைகள்

1.தமிழ்நாடு அரசுத் துறை, தமிழ்நாடு அரசின் தொழில் – வணிகத்துறை அனைத்திலும் நூறு விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும். வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கக் கூடாது!

2.தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள், அதன் தொழில் – வணிக நிறுனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேல் வேலையில் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்.

3.தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். வெளி மாநிலத்தவர்களைப் படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.

தனியார் துறையில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்கள் வேலைக்கு வருவதில்லை, எங்களுக்குத் தொழிலாளிகள் கிடைக்காததால் வெளி மாநிலத் தொழிலாளிகளை அழைக்கிறோம் எனத் தொழில் முனைவோர் கூறுகின்றனர். இக்குறைபாட்டைச் சரி செய்ய – தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை பெற்றுத் தரவும், தமிழ்நாட்டுத் தொழில் முனைவோர்க்குக்குத் தொழிலாளிகளைத் தரவும் “மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” என்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். வேலை தேடுவோர் – தொழிலாளி தேடுவோர் இருதரப்பாரும் தங்களின் தேவை குறித்த விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப பணிகளும் தொழிலாளர்களும் கிடைக்க வேலை வழங்கு வாரியம் முழுத்திறனுடன் செயல்பட வேண்டும்.

வெளி மாநிலங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தமிழர்களையும் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் அந்த வாரியத்தின் செயல்பாடு இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை கிடைக்காமல் துன்புறுவோர்க்குத் தமிழ்நாடு அரசு வாழ்வூதியம் வழங்க வேண்டும். ஓர் ஆண்டிற்கு மேல் காத்திருப்போர்க்குப் பின்வருமாறு வாழ்வூதியம் வழங்க வேண்டும். பள்ளிப் படிப்பிலிருந்து பட்டயப்படிப்பு – இளங்கலை வரை கல்வித்தகுதி உள்ளோர்க்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்; முதுகலைத் தகுதி உள்ளோர்க்கு மாதம் 7,500 ரூபாய்; தனித்திறன் பெற்று – தொழிலியல் (Professional) மேற்படிப்புப் படித்து வேலை இன்றி இருப்போர்க்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வாழ்வூதியம் வழங்க வேண்டும். செர்மனி உள்ளிட்ட பல மேலை நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. இப்போது வேலையில்லாக் கால உதவித் தொகை என்பது மாதம் ரூபாய் 200லிருந்து 600 வரை உள்ளது. அதுவும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை தேடிப் பதிவு செய்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு! இதை மேற்கண்டவாறு மாற்றி அமைக்க வேண்டும்.

4.தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்க்கும், தொழில் – வணிக நிறுவனங்களுக்கும் மானியங்கள் உட்பட ஊக்குவிப்புத் திட்டங்களையும் பல சலுகைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும்.

5.வெளி மாநில – வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம், நிலம், வரி போன்றவற்றில் அளிக்கும் சலுகைகளை நீக்க வேண்டும். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில் – வணிக நிறுவனங்களைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு உரிமம் வழங்கக் கூடாது. அவர்கள் சொத்துகள் வாங்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்.

நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்குள் வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் மாநில அரசின் முன் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதற்கு உள்அனுமதி அதிகாரம் (Inner Line Permit) என்று பெயர். அதே உள்அனுமதி அதிகாரம் தமிழ்நாட்டுக்கும் வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிப் பெற வேண்டும். மனை வணிகத்திலிருந்து வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வலியுறுத்துவோம்! மக்களிடம் இக்கோரிக்கைகளை எடுத்துச் செல்வோம்!

இக்கோரிக்கைகளைச் செயல்படுத்துவதற்குரிய சட்டங்களை, அரசு ஆணைகளைத் தமிழ்நாடு அரசு உடனே பிறப்பிக்கக் குரல் கொடுப்போம்!

இக்கோரிக்கைகள் பற்றிய பரப்புரையை நம் மக்களிடம் செய்த பின், 22.10.2021 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தின் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி – ஆட்சியாளர்களிடம் விண்ணப்பம் கொடுப்போம்!

மண்ணின் மக்களே! வேலை – வணிகம் – வீடு வாடகை – நில விற்பனை முதலியவற்றில் வெளி மாநிலத்தவரைப் புறக்கணிப்பீர்! ஒத்துழையாமை கடைபிடிப்பீர்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response