கொரோனா முடக்கத்திலும் இவ்வளவு கைதுகளா? – மோடியைச் சாடும் பெ.மணியரசன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை – காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ .மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி, முழுநிலவன் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், வே.க. இலக்குவன், பூதலூர் தென்னவன், தருமபுரி விசயன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று…..

கொரோனா கெடுபிடி காலத்திலும் மோடி அரசின் தொடரும் அடக்குமுறை!

அரசின் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பெரும் கடமை உள்ள சூழலிலும், மோடி அரசு தனது அதிகாரக்குவிப்பு அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா முழுவதுக்குமான முழு முடக்கத்தை தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 2020 மார்ச்சு 24 இரவு 8 மணிக்கு அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா நடத்திய பொறுப்பற்ற செயலை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிய “தி வயர்” (The Wire) – இணைய இதழின் ஆசிரியர் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 505 (2)இன் கீழ் சமூக மோதலை உண்டாக்க முயற்சித்தாக குற்றவியல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

விசாரணைக் கைதிகளையும், சிறு குற்றங்களுக்காக சிறையிலுள்ள கைதிகளையும் பிணையிலோ, முன் விடுதலையிலோ சிறையிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, முன் விடுதலை – பிணை விடுதலை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அரசு, பீமா கொரேகான் வழக்கில் மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கல்வியாளர் பேராசிரியர் கவுதம் நவலாக்கா ஆகியோரை கைது செய்திருக்கிறது. இதே வழக்கில் மக்கள் கவிஞர் வரவரராவ், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் ஃபரைரா, கோன்சல்வஸ் உள்ளிட்ட மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் கொடிய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பாய்ந்திருக்கிறது.

அதேபோல், ஊடகவியலாளர் என்ற வகையில் செய்தி வழங்கும் தனது கடமையைச் செய்த இந்து செய்தியாளர் அஷிக், ஒளிப்பட ஊடகவியலாளர் ஜாஸ்ரா ஆகியோர் சம்மு காசுமீர் மாநிலத்தில் இதே UAPA சட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தங்கள் வளாகத்திற்குள்ளேயே போராடிய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.

முகநூல் பதிவுகளுக்காக பல பேர் மீதும் அன்றாடம் கொடிய வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. மக்கள் கவனம் கொரோனா நெருக்கடியில் இருக்கும்போது, நாடு முழுவதும் முழு முடக்கத்தில் இருக்கும்போது, எந்த வகை சனநாயக வழிப்பட்ட எதிர்ப் போராட்டங்களையும் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த சூழலைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி அரசும், மாநில அரசுகளும் அடக்குமுறை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனது ஆரியத்துவ அடக்குமுறைப் பயணத்தில் நரேந்திர மோடி இன்னும் தீவிரமாகச் செயல்படுவார் என்பதன் அறிகுறியாகவே இந்தக் கைதுகள் உள்ளன.

இந்திய அரசு இந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட்டு, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response