சசிகலா விடுதலையில் குழப்பம்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 27 ஆம் தேதி அவர் விடுதலை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி அவர் விடுதலையாவார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தாலும், 7 அல்லது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியுள்ளதால், 27 ஆம் தேதி விடுதலைக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மற்றொரு புறம், விடுதலை தேதியைக் கடந்து, மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என்றால், சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவாரா? அல்லது மருத்துவமனையில் இருந்தப்படியே விடுதலை செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிறை விதிமுறைப்படி தற்போது சசிகலா தண்டனைக் கைதி.அந்த அடிப்படையில், காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நலம் தேறிய பின்னர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்று, அங்கு கைதிகளுக்குரிய அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்துத்தான் விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் சில ஆவணங்களில் அவர் கையெழுத்திட வேண்டியுள்ளது என்றும் அந்த ஆவணங்களை மருத்துவமனைக்கு எடுத்துவரக் கூடாது என்று விதிமுறை உள்ளதாகவும் அதனால் சிகிச்சை எப்பொழுது முடிந்தாலும், அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்துதான் விடுதலை செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்தபடி அவர் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றனர். அதற்கு சிறைத்துறை சம்மதம் தெரிவிக்க வாய்ப்பு இல்லையாம்.

சிறைத்துறை நிர்வாகம் கொரோனா விதிமுறையைக் கடைபிடித்து விடுதலை செய்தால் பிப்ரவரி 2 ஆம் தேதி அல்லது பிப்ரவரி 5 ஆம் தேதிதான் அவர் விடுதலை செய்யப்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இது குறித்த இறுதி முடிவு இன்று அல்லது நாளை சிறைத்துறை சார்பில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response