இருபது நாட்கள் கழித்து சூரப்பாவுக்குக் கமல் ஆதரவு – அதனால் எழும் ஐயங்கள்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது அரியர் தேர்வுகள் இரத்து உட்பட பல விசயங்களில் ரூ.280 கோடி ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்று நவம்பர் மாத மத்தியில் அமைக்கப்பட்டது. இதற்கான விசாரணையும் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியுள்ளது.

இது நடந்து இருபது நாட்கள் கழித்து இன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர். சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் இந்திய நாட்டிலேயே மிகச்சிறந்த உயராய்வு கல்வி நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம். இந்த அண்ணாப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசிடமிருந்து பறித்து, தன் வசப்படுத்திக் கொண்டு, மாணவர் சேர்க்கை, பேராசிரியர் மற்றும் அலுவலர் சேர்க்கை முதலியவற்றில் தமிழர்களைப் புறந்தள்ளிவிட்டு, இந்திக்காரர்களை சேர்த்துக் கொள்ளவும், இட ஒதுக்கீட்டை காலி செய்யவும் மோகன் பகவத் – மோடி அரசு முயன்று வருகிறது.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மூடி மறைக்க இந்திய உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்த்தப் போவதாகக் கூறிக் கொண்டு, அண்ணா பொறியியல் பல்கலைக்கழத்தை சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி. போல மற்றுமொரு அக்கிரகாரமாக – இந்தி மண்டலமாக மாற்ற வேண்டுமென்பதே மோகன் பகவத் – மோடி அரசின் திட்டம்!

இந்த உண்மையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், உறுதியாக எதிர்க்காமல் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும், இந்திய அரசு கேட்கும் பணம் கொடுக்க வசதியில்லை என்றும் காரணங்களைக் கூறி, பல்கலைக்கழகத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்கிடையே, மேற்படி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசிடம் ஒப்படைக்கத் தயார் என்றும், இந்திய அரசு இதற்காகக் கேட்கும் 1,570 கோடி ரூபாயை ஐந்து தவணைகளில் பல்கலைக்கழகமே செலுத்திவிடும் என்றும் உறுதிகூறி, நடுவண் கல்வி அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.

மாணவர்கள் செலுத்தும் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம், இணைப்புக் கல்லூரிகள் கொடுக்கும் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் நடுவண் கல்வி அமைச்சகத்துக் செலுத்திவிடுவதாக அக்கடிதத்தில் உறுதி கூறியுள்ளார். துணை வேந்தர் சூரப்பாவின் இந்த நடவடிக்கை, தமிழ்நாடு அரசின் அதிகாரத்தைத் தனது காலுக்குக் கீழே போட்டு மிதிக்கும் இழிவான செயலாகும்!

இந்த சூரப்பா இப்படிப்பட்ட ஆரியத்துவாவாதி – அராஜகவாதி என்பதைத் தெரிந்து கொண்டுதான், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடைமுறை மரபுகளை மீறி, தமிழ்நாடு அரசோடு கலந்து பேசாமல் கர்நாடகத்தைச் சேர்ந்த இவரை துணை வேந்தராக அமர்த்தியுள்ளாரோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசு வசம் ஒப்படைக்க முடியாது என்பதை ஒளிவு மறைவின்றிக் கூற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் சமூகநீதி, அரசுரிமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் எடப்பாடி அவர்கள் செயல்பட வேண்டும் என்றும், விதிகளை மீறி அராஜகமாக செயல்படும் சூரப்பாவை சட்ட வல்லுநர்களைக் கலந்து நடவடிக்கை எடுத்து, பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தமிழ்நாட்டில் பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் கமல்ஹாசன் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருப்பது பல்வேறு ஐயங்களுக்கு இடம் கொடுக்கிறது என்கிறார்கள்.

Leave a Response