
தமிழ்நாட்டில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சென்னை, தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், ராஜாத்தி என்கிற கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுதவிர அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, மு.சுப்பிரமணியன், கு.பத்மராஜன், து.கு.மேஷாக் கிருபாகரன் ஆகிய 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனு செய்தனர்.
வேட்புமனு பரிசீலனை கடந்த 10 ஆம் தேதி காலை தேர்தல் அதிகாரியும் சட்டமன்றப் பேரவை கூடுதல் செயலாளருமான சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்தது. அப்போது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், ராஜாத்தி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோருக்கு 10 சமஉக்கள் முன்மொழிந்தது மற்றும் அவர்களின் ஆவணங்கள் சரியாக இருந்ததால் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேருக்கு ஒரு சமஉ கூட முன்மொழியாததால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 6 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், மனுக்களைத் திரும்பப் பெற நேற்று (12 ஆம் தேதி) மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. நேற்று மாலை 3 மணி வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் 6 பேரும் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர். எனவே, 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்களான வில்சன், ராஜாத்தி, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர்.
அதிமுக வேட்பாளர்களான இன்பதுரை, தனபால் ஆகியோர் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொள்வார்கள். இவர்களின் பதவிகாலம் 6 ஆண்டுகள்.


