
மணிரத்னம் இயக்கத்தில் கமல்,சிம்பு உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.
அப்பட விளம்பர நிகழ்ச்சியில், கன்னடம் – தமிழ் உறவு குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கன்னட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில் கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை.
இதற்கு எதிராக சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் உஜ்ஜால் புயன், மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தடை, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல். கன்னட அமைப்பினரின் மிரட்டலுக்கு கர்நாடக அரசு பணிந்துள்ளது”என வாதிடப்பட்டது.
நீதிபதி மன்மோகன், ‘‘நாடு முழுவதும் தக் லைஃப் படத்தை வெளியிட மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் போதுமானது. அதைப் பெற்ற படத்தை திரையிடுவதை யாராலும் தடுக்க முடியாது. குறிப்பிட்ட
கும்பலோ, அமைப்பினரோ சட்டத்தை மீறுவதை அனுமதிக்க முடியாது. திரையரங்கைக் கொளுத்துவோம் என கன்னட அமைப்பினர் எச்சரித்தால், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான கர்நாடக அரசு எப்படி அமைதியாக இருக்க முடியும்?
ஒரு கும்பல் திரையரங்கையோ, தெருவையோ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை மீறுவதை, கர்நாடக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது? கர்நாடகாவில் அனைவரும் தக் லைஃப் படத்தை பார்க்க வேண்டுமென ஆணை பிறப்பிக்க முடியாது. ஆனால், நிச்சயமாக அந்தப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்க முடியும். கமல்ஹாசன் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கலாம்.
பெங்களூருவில் உள்ள அறிவுஜீவிகள் கூட்டறிக்கை வெளியிடலாம். அதனை விடுத்து திரையரங்கை
கொளுத்துவோம் என்பதை ஏற்க முடியாது.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இதுதான்
நீதிபதியின் பணியா? இந்த வழக்கில் கர்நாடக அரசு ஏன் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாமல் இருக்கிறது? ஜூன் 18 ஆம் தேதி (இன்று) பதில் தாக்கல் செய்ய வேண்டும். மறுநாள் (ஜூன் 19) நாங்கள் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறோம்”என்றார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவகுமார், உச்சநீதிமன்ற உத்தரவை நாம் மதிக்க வேண்டும். அனைவருக்கும் வரம்புகள் உள்ளன. நமக்கு வரம்புகள் இருக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அனைத்து கன்னட ஆர்வலர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து அமைதியாக இருங்கள். யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது. கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கர்நாடகா எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலமாக இருந்து வருகிறது, பெங்களூரு மக்கள் தாராளமாக இருக்க வேண்டும். பெங்களூரில் அனைத்து சாதிகள், மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இது ஒரு சர்வதேச நகரம். கர்நாடகமக்கள் எப்போதும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சிக்கலில் கன்னட அமைப்புகளோடு சேர்ந்து கர்நாடக முதலமைச்சரும் பேசியிருந்தார்.அதனால்தான் படம் அங்கு வெளியாகவில்லை.இப்போது உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டியதும் கர்நாடக அரசு இறங்கி வந்திருக்கிறது.


