குஜராத் பெருந்துயரம் – பாஜக முன்னாள் முதலமைச்சர் உட்பட 251 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் இலண்டனுக்குப் புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விமானப் பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விபத்தில் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்புப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியதில், அந்தக் கட்டிடம் உடைந்து நொறுங்கியது. இதில்,இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார்.

அவர் கூறியதாவது….

கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்புப் படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என்றார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் இலண்டனில் வசிக்கிறார். அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டாடா குழும சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட தகவல்….

ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை. தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் சார்ந்தே எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் எங்களது பங்கு இருக்கும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response