மகாராஷ்டிராவில் இழுபறி – சிவசேனா அணி மாறுமா?

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதில்,பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரசு, தேசியவாத கான்கிரசு ஆகியன ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

ஆளும் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. இந்தக் கூட்டணியில் 164 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. இந்த அணியில் 147 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 44 இடங்களும், 121 தொகுதிகளில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன.

பிற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைத்தன. 13 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

முதல்வர் பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு அமைச்சர் பதவிகள்? ஆகியனவற்றை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

மராட்டியத்தில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும்,பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் மறுபடியும் முதல்வர் ஆவார் என்றும் பாரதீய ஜனதா தேர்தலுக்கு முன்பே அறிவித்தது.

இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

ஆனால், முதல்வர் பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதேபோல் அமைச்சர் பதவிகளையும் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிலும் சிவசேனா உறுதியாக இருக்கிறது.

மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

ஆனால் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதா தயாராக இல்லை.

இதனால், புதிய அரசு அமைப்பதில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இதனால், சிவசேனா, காங்கிரசு, தேசியவாத காங்கிரசுக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில்,

புலி (சிவசேனா கட்சியின் அடையாளம்) ஒன்று தனது கழுத்தில் கெடிகாரத்துடன் (தேசியவாத காங்கிரசு சின்னம்) கூடிய சங்கிலியை அணிந்தபடி, தாமரையை (பாரதீய ஜனதாவின் சின்னம்) முகர்ந்து பார்ப்பது போன்ற கேலிச்சித்திரத்தை வெளியிட்டு இருந்தார்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிட சிவசேனா தயாராக இல்லை என்பதையே இந்த கேலிச்சித்திரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க தாங்கள் தயாராக இல்லை என்பதை காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

இதுபற்றி மராட்டிய மாநில காங்கிரசு தலைவர் பாலசாகிப் தோரட் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக சிவசேனாவுடன் கைகோர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், சட்டசபையில் காங்கிரசு பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல் தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவாரும், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இந்த பரப்பரப்பான சூழ்நிலையில், புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதிய அரசு அமைப்பதில் சிவசேனாவின் நிலைப்பாடு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response